தனுசு ராசி நேயர்களே...

சமீபத்தில் பார்த்து சிரித்து ரசித்த இரண்டு குறும்படங்கள் 'ஜக்கு பாய்ஸ்' & 'காதலில் சொதப்புவது எப்படி'. குறும்பட இலக்கணங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பார்த்து சிரிக்கலாம்.
காதலில் சொதப்புவது எப்படி படம் கலைஞர் டிவி - நாளைய இயக்குனர் நிகழ்ச்ச்சியில் வந்தது என யூகிக்கிறேன். பார்ப்பதற்கு சுவாரசியமான பல உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன.
ஜக்கு பாய்ஸ் படம் நண்பர்களின் மின்னஞ்சல் வழியே அறியக் கிடைத்தது. நம்ம பொட்டி தட்டும் மென் பொருள் துறை மக்களை பற்றியது. இதில் இதில் "வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்சாய்ங்களாம்" என்றொரு வசனம் சிந்தனைக் குதிரையை தட்டி எழுப்பி அறுபது கி.மீ வேகத்தில் தலை தெறிக்க ஓட வைக்கிறது. பல பரிமாணங்களைக் கொண்ட, பல அர்த்தங்களை பொதிந்து வைத்திருக்கும் வசனம். :-)


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


வாங்கி பல காலமாக தொடவே இல்லையே என நினைத்து, அந்த புது பேண்ட் & சட்டையை எடுத்து போட்டு, மூன்று நாள் தாடியை சவரம் செய்து மிடுக்காக அலுவலகம் கிளம்பினேன் நான்கு நாட்களுக்கு முன். ரயில் நிலையம் செல்லும் வழியில் சில பெண்கள் நம்மை பார்த்ததாக நினைத்துக் கொண்டு மென் சிரிப்புடன் தாம்பரம் ரயில் ஏறினேன். பெண்கள் என்னை பார்த்தார்களோ இல்லையோ, தாம்பரத்தில் ரயில் முழுவதும் நிற்பதற்கு முன்பாகவே அவசரமாக நான் இறங்கியதை பார்த்த ஒரு ரயில்வே போலீஸ் ஒருவர், பிடித்து ஸ்டேஷனுக்குள் உட்கார வைத்து விட்டார். நான் ஏதாவது பேசி சம்மாளிக்க முயன்று தோற்று விட, என்னை போன்றே சிக்கிய இன்னொருவர் போலீசுடன் வாக்கு வாதத்தில் இறங்கினார். அரை மணி நேரம் இருக்க சொல்லி, அபராதம் வாங்கி அனுப்பி விடுவார்கள் என நினைத்து ஆனந்தமாக ஸ்டேஷனில் உள்ள டிவியில், இசையருவி சேனலின் பாடல்களை ரசித்து கொண்டிருந்தேன். அவ்வப்போது, மொக்கையான காக்கி சட்டையிலும் அழகாய் தெரிந்த ஒரு பெண் போலீஸ், தாவணியில் எப்படி இருப்பார் என கற்பனை சிறகடித்தது.

இதே போல் அடுத்த மின்சார ரயிலில் சாகசமாய் இறங்கி சிக்கிய நான்கு பேர் அழைத்து வரப்பட்டனர். அதிலிருக்கும் ஒருவரிடம் பேசும் போது, "மூணாவது தடவை சிக்குறேன் பாஸ்... இன்னிக்கு முழுதும் விட மாட்டய்ங்க. நாலு மணிக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயி அபராதம் கட்ட வெச்சு இழுதடிச்சுருவாய்ங்க" என அவர் சிரித்து கொண்டே சொல்ல எனக்கு டரியல் ஆனது. ஏதாவது தமிழ் சேனலில் "தனுசு ராசி நேயர்களே...இன்று புது சட்டை போட்டு போலீஸ் ஸ்டேஷனில் குத்த வெச்சு உட்காரும் யோகம் உங்களுக்கு" என ஜோதிட திலகம் யாரவது கணித்து சொல்லியிருப்பாரோ என எனக்குள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது.

அரசு எந்திரங்களில் அல்லது வெளி இடங்களில் எதாவது காரியம் ஆக வேண்டுமானால், யாரவது நண்பர்கள்/உறவினர் தொடர்பை பிடித்து சாதித்து கொள்ளும் சாதாரண மிடில் கிளாஸ் ஆசாமி போல் செயல் பட ஆரம்பித்தேன். சில வருடங்களுக்கு முன் 'ரயில்வே' பொறியாளர் வேலையை உதறி, தற்போது தமிழக அரசு துறையொன்றில் பணி புரியும் பள்ளித்தோழனை அலைபேசியில் அழைத்து நிலைமையைக் கூற, அவன் தனது பழைய ரயில்வே நண்பனொருவனின் உதவியுடன் சட்டத்தை வளைக்க காய் நகர்த்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் சுமூகமாய் முடிய, இசையருவி சேனலில், "நேர்மைதான் வெற்றியின் ரகசியமே " என்ற பாய்ஸ் பட பாடலின் ஒரு வரி உச்சஸ்தாயில் ஒலிக்க, வெளியே வந்து வறுத்த கடலை வாங்கி சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினேன். உடனிருந்த, சாகம் செய்த சாமானியர்களில் பத்தில் ஏழு பேர் நீதிமன்றம் சென்று அபராதம் கட்டியிருப்பார்கள்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



வினோதமான நரம்பிசைக் கருவி

ஏழு நரம்புகள் இழுத்துக் கட்டப்பட்டு
அடர் நீல நிறம் கொண்ட
வினோதமான நரம்பிசைக் கருவியொன்றை
பரிசளித்து விட்டு புதிர்ச் சிரிப்புடன்
விடைபெற்றுச் சென்றாள்.
ஒரு தீராத் தனிமைப் பொழுதில்
மீட்டத் துவங்கினேன் அக்கருவியை.
துரோகம், காமம், குரோதம்,
குரூரம், காதல் என வித விதமான
என் ஆழ் மன எண்ணங்களை அகழ்ந்தெடுத்து
வார்த்தைகளாய் மொழி பெயர்த்து
அவ்விசைக்கருவி உரக்கப் பேசத் துவங்கியதும்,
திகைப்புடன் நிறுத்தி விட்டேன் மீட்டுதலை.
இன்னும் மிச்சமிருக்கும் அதன் மீயொலி அதிர்வுகள்
எனதறையை நிறைக்க
நான் எனும் சுயம்
உள்ளிருந்து மீண்டெழுந்து
என் உடலைப் பார்த்துப்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறது சில காலமாய்!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட