இச்சைப் பெருங்கடல்



பூனைக்குட்டியைப் புரிந்து கொள்ளுதல்
=======================================

யூகிக்க இயலா உடல்மொழியுடன்
தனித்துத் திரியும் பூனைக்குட்டியின் உலகம்
புரியா புதிர்ப் பிம்பங்கள் நிறைந்தது.
மிகு விருப்பப் பொழுதுகளிலோ
உற்ற துணையின் உடனிருப்பிலோ
அவிழ் மொக்கையொத்த சிறு
செவ்வாய் சிரித்து நீர் சுரக்கலாம்.
இவை தவிர எக்கணத்திலும்,
வலி வெறுப்பு களைப்பு என
எவ்வுணர்வுகளின் நிறச் சாயல்களையும்
தன் மேல் படிய விடுவதில்லை.
கரு நிறச் சிறு மென் மயிர்கள் தடவி
சொற்கள் உதிர்க்கா செந்நிற உதடுகளை
வாஞ்சையுடன் நாவால் வருடி
அழுந்த முத்தமிட்டு, அதன் முன்
ஒரு குழந்தையாகிக் குழைந்தால்
உங்கள் நடுவிரல் கவ்விப் பிடித்து
அந்தரங்கப் புதிர்கள் அவிழும்
உணர்வு முடிச்சுகளின் தடம் காட்டிச் சிரிக்கும்.
பூனைக் குட்டியைப் புரிந்து நெருங்கும்
அத்தோழமை கணத்தில் நிகழலாம்
கோடியின்பம் கொண்ட உலகிற்கான
ஒற்றைக் கதவின் திறப்பு.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



இச்சைப் பெருங்கடல்

======================



துணையின்றி நகராத் தோணி செய்து
இச்சைப் பெருங்கடலைக் கடக்கக்
கரையில் காத்திருந்தேன் துடுப்புகளுடன்.
வெகு காலம் சென்ற பின்பு
வசீகர அந்தி மாலையொன்றில்
உயிர் கொல் வளைவுகளுடனும்
மோகமொளிரும் கண்களுடனும்
வந்தவளிடம் சொன்னேன்
நெடிய காத்திருப்பின் வலியை.
என் முகமேந்தி அவள் முத்தமிட்டதும்
நகரத் தொடங்கியது தோணி.
அதி மிருதுவான கழுத்தில்
மென் முத்தங்களிட்டுக் கீழிறங்கி
இளமஞ்சள் நிற இணை முகில்களைக்
கைகளிலேந்தி ஒன்றைக் கவ்வியிழுத்துச்
சுவைக்கும் பொழுது கடலின் நடுவே
சூல் கொண்டதொரு புயல்.
பெரும் அலைகளின் ஓசை லயத்துடன்
ஒத்திசைவாய் முயங்கி
புயலின் நடுவே புணர்ந்து களைத்துறங்கி
மறு கரையில் துயிலெழ
இணைந்தவள் எங்கோ மறைந்ததுணர்ந்தேன்.
அவள் சென்ற திசையில்
பதிந்த காலடித் தடங்களில்
தேங்கியிருக்கின்றன நான் கடப்பதற்கு
இன்னும் நூறு கடல்கள்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



வெண்புறாவின் இறகொன்று
===========================
இறுகத் தழுவி இதழ்கள் கவ்வி
கலவிக் களைத்து காமம் கரைந்தோடிய
மோகப் பொழுதுகள் கழிந்ததும்
முகம் மறைத்த முடி கோதிக்
காது மடலுக்குப் பின் சேர்த்து
நெற்றியிலிடும் ஈர முத்தத்தில்
என் தூயன்பில் தோய்த்த
வெண் புறாவின் இறகொன்று
மிதப்பதாய்ச் சொல்லி மகிழ்கின்றாய்.
நளினமாய் மிதந்திறங்கும்
அன்புச் சிறகைக் கவ்விப் பிடித்து
மோகத்துடன் மீண்டும் உன் மேல்
பாய்ந்து முயங்கக் காத்திருக்கிறது
தீ நாவுகளைப் போலசையும்
பிடரி மயிர் கொண்ட என்றும் அயரா
காமம் எனும் நீலக்கண் புரவி.



.

தனுசு ராசி நேயர்களே...

சமீபத்தில் பார்த்து சிரித்து ரசித்த இரண்டு குறும்படங்கள் 'ஜக்கு பாய்ஸ்' & 'காதலில் சொதப்புவது எப்படி'. குறும்பட இலக்கணங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பார்த்து சிரிக்கலாம்.
காதலில் சொதப்புவது எப்படி படம் கலைஞர் டிவி - நாளைய இயக்குனர் நிகழ்ச்ச்சியில் வந்தது என யூகிக்கிறேன். பார்ப்பதற்கு சுவாரசியமான பல உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன.
ஜக்கு பாய்ஸ் படம் நண்பர்களின் மின்னஞ்சல் வழியே அறியக் கிடைத்தது. நம்ம பொட்டி தட்டும் மென் பொருள் துறை மக்களை பற்றியது. இதில் இதில் "வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்சாய்ங்களாம்" என்றொரு வசனம் சிந்தனைக் குதிரையை தட்டி எழுப்பி அறுபது கி.மீ வேகத்தில் தலை தெறிக்க ஓட வைக்கிறது. பல பரிமாணங்களைக் கொண்ட, பல அர்த்தங்களை பொதிந்து வைத்திருக்கும் வசனம். :-)


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


வாங்கி பல காலமாக தொடவே இல்லையே என நினைத்து, அந்த புது பேண்ட் & சட்டையை எடுத்து போட்டு, மூன்று நாள் தாடியை சவரம் செய்து மிடுக்காக அலுவலகம் கிளம்பினேன் நான்கு நாட்களுக்கு முன். ரயில் நிலையம் செல்லும் வழியில் சில பெண்கள் நம்மை பார்த்ததாக நினைத்துக் கொண்டு மென் சிரிப்புடன் தாம்பரம் ரயில் ஏறினேன். பெண்கள் என்னை பார்த்தார்களோ இல்லையோ, தாம்பரத்தில் ரயில் முழுவதும் நிற்பதற்கு முன்பாகவே அவசரமாக நான் இறங்கியதை பார்த்த ஒரு ரயில்வே போலீஸ் ஒருவர், பிடித்து ஸ்டேஷனுக்குள் உட்கார வைத்து விட்டார். நான் ஏதாவது பேசி சம்மாளிக்க முயன்று தோற்று விட, என்னை போன்றே சிக்கிய இன்னொருவர் போலீசுடன் வாக்கு வாதத்தில் இறங்கினார். அரை மணி நேரம் இருக்க சொல்லி, அபராதம் வாங்கி அனுப்பி விடுவார்கள் என நினைத்து ஆனந்தமாக ஸ்டேஷனில் உள்ள டிவியில், இசையருவி சேனலின் பாடல்களை ரசித்து கொண்டிருந்தேன். அவ்வப்போது, மொக்கையான காக்கி சட்டையிலும் அழகாய் தெரிந்த ஒரு பெண் போலீஸ், தாவணியில் எப்படி இருப்பார் என கற்பனை சிறகடித்தது.

இதே போல் அடுத்த மின்சார ரயிலில் சாகசமாய் இறங்கி சிக்கிய நான்கு பேர் அழைத்து வரப்பட்டனர். அதிலிருக்கும் ஒருவரிடம் பேசும் போது, "மூணாவது தடவை சிக்குறேன் பாஸ்... இன்னிக்கு முழுதும் விட மாட்டய்ங்க. நாலு மணிக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயி அபராதம் கட்ட வெச்சு இழுதடிச்சுருவாய்ங்க" என அவர் சிரித்து கொண்டே சொல்ல எனக்கு டரியல் ஆனது. ஏதாவது தமிழ் சேனலில் "தனுசு ராசி நேயர்களே...இன்று புது சட்டை போட்டு போலீஸ் ஸ்டேஷனில் குத்த வெச்சு உட்காரும் யோகம் உங்களுக்கு" என ஜோதிட திலகம் யாரவது கணித்து சொல்லியிருப்பாரோ என எனக்குள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது.

அரசு எந்திரங்களில் அல்லது வெளி இடங்களில் எதாவது காரியம் ஆக வேண்டுமானால், யாரவது நண்பர்கள்/உறவினர் தொடர்பை பிடித்து சாதித்து கொள்ளும் சாதாரண மிடில் கிளாஸ் ஆசாமி போல் செயல் பட ஆரம்பித்தேன். சில வருடங்களுக்கு முன் 'ரயில்வே' பொறியாளர் வேலையை உதறி, தற்போது தமிழக அரசு துறையொன்றில் பணி புரியும் பள்ளித்தோழனை அலைபேசியில் அழைத்து நிலைமையைக் கூற, அவன் தனது பழைய ரயில்வே நண்பனொருவனின் உதவியுடன் சட்டத்தை வளைக்க காய் நகர்த்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் சுமூகமாய் முடிய, இசையருவி சேனலில், "நேர்மைதான் வெற்றியின் ரகசியமே " என்ற பாய்ஸ் பட பாடலின் ஒரு வரி உச்சஸ்தாயில் ஒலிக்க, வெளியே வந்து வறுத்த கடலை வாங்கி சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினேன். உடனிருந்த, சாகம் செய்த சாமானியர்களில் பத்தில் ஏழு பேர் நீதிமன்றம் சென்று அபராதம் கட்டியிருப்பார்கள்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



வினோதமான நரம்பிசைக் கருவி

ஏழு நரம்புகள் இழுத்துக் கட்டப்பட்டு
அடர் நீல நிறம் கொண்ட
வினோதமான நரம்பிசைக் கருவியொன்றை
பரிசளித்து விட்டு புதிர்ச் சிரிப்புடன்
விடைபெற்றுச் சென்றாள்.
ஒரு தீராத் தனிமைப் பொழுதில்
மீட்டத் துவங்கினேன் அக்கருவியை.
துரோகம், காமம், குரோதம்,
குரூரம், காதல் என வித விதமான
என் ஆழ் மன எண்ணங்களை அகழ்ந்தெடுத்து
வார்த்தைகளாய் மொழி பெயர்த்து
அவ்விசைக்கருவி உரக்கப் பேசத் துவங்கியதும்,
திகைப்புடன் நிறுத்தி விட்டேன் மீட்டுதலை.
இன்னும் மிச்சமிருக்கும் அதன் மீயொலி அதிர்வுகள்
எனதறையை நிறைக்க
நான் எனும் சுயம்
உள்ளிருந்து மீண்டெழுந்து
என் உடலைப் பார்த்துப்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறது சில காலமாய்!

மழை சூழ் காலை வேளைகள்

தமிழ் திரையிசை பாடல்கள் தவிர Bryan Adams, Bon Jovi, Enrique என தலைக்கு நாலு பாட்டு தெரிஞ்சு வெச்சுகிட்டு 'நாங்களும் இங்கிலீஷ் மீஜிக் கேப்போம்ல அப்படின்னு அலப்பறைய குடுத்துட்டு இருந்தேன். புதுசா வேலைக்கு சேர்ந்து நம்ம கோஷ்டில ஐக்கியமான நிஜமாவே இங்கிலீஷ் மீஜிக் கேக்குற ஒரு சகா, The Corrs எனும் இந்த ட்ரூப்பின் Toss the feathers யூடியூப் லிங்க் அனுப்பினான். நீங்களும் கேட்டு பாருங்க... அழகிய பெண்கள்...அற்புத இசை.



இந்த மாதிரி ஒரு இசை நிகழ்வில் அன்பின் தோழி யாராவது உடனிருக்க, மிதமான மது போதையில் நடனமாடிக் கொண்டே இசையுடன் ஒன்ற வேண்டுமென்பதுதான் என் நெடு நாளைய கனவு. ம்ம்ம்...!!!!




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



கவிஞர் அம்சப்ரியா நடத்தும் 'புன்னகை' இலக்கிய சிற்றிதழின் அறுபதாவது பதிப்பு, இணையத்தில் இயங்கும் அறுபது கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாய் வெளிவந்தது. அதில் என்னுடைய கவிதையும் ஒன்று மாநகரைத் துயிலெழுப்புபவள் . புத்தகத்தை வாங்கி அச்சில் நம் எழுத்தை பார்க்கும்போது சிறப்பானதொரு உணர்வு. மிக சிறந்த கவிதை படைப்புகளினூடே நம்முடையதும் இருக்கிறதென்பது என்னளவில் மிகப் பெரிய அங்கீகாரம்.





அதோடு தோழர் மாதவராஜ், புதிதாய் வலையில் எழுதுபவர்களை அறிமுகம் செய்யும் 'புதிய பதிவர்கள் அறிமுகம்' எனும் பகுதியில் என்னுடைய இந்த வலைப்பூவையும் அறிமுகம் செய்துள்ளார்.
சக கவிஞர்கள்/பதிவர்களுக்கு வாழ்த்துகள். தோழர் மாதவராஜ், கவிஞர் அம்சப்ரியா இருவருக்கும் நன்றிகள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


முதலில் ட்விட்டரை பற்றி கேள்விப்படும்போது 'அப்படி இதுல என்ன இருக்குன்னு பைத்தியமா திரியுறாய்ங்க'-ன்னு தோன்றியது. இப்போது அந்த பைத்தியங்களில் நானும் ஒருவன். எதையாவது பளிச்னு சொல்லி மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளத் துடிக்கும் மனிதனின் உள்ளுணர்வை ட்விட்டர் எனும் சிட்டுக்குருவி அற்புதமாய் exploit செய்கிறது. இதுவரை நான் ட்விட்டிய சில சிந்தனைகள்(?)/தத்துவங்கள்(?)/மொக்கைகள்(!) கீழே. படித்து விட்டு கோபம் வந்தால் டிவிட்டரில் என்னை பின்தொடரவும். எல்லை மீறிய கோபம்/ விரக்தி ஏற்பட்டால் மேலே உள்ள வீடியோவை மீண்டுமொரு முறை பார்த்து ஆன்மாவை சுகப்படுத்துவீராக. ஆமென்!

## இந்த பக்தகோடிகள் தொல்லை தாங்க முடியலப்பா... மார்கழி மாசம் குழாய் ஸ்பீக்கரை கட்டி 'Hi-Decibel' ல பாட்டு போட்டாதான் அம்மனோ/அய்யப்பனோ வந்து அருள்புரிவாங்களா? காலைல 5 மணிக்கே ஆரம்பிச்சிர்ராய்ங்க.நல்லா தூங்கி 4 நாள் ஆச்சு..இவிய்ங்க பக்தியில மண்ணுலாரிய விட்டு தான் ஏத்தனும்!

## Watched 'Scent of a Woman'.Al Pacino rocks.1 of his dialogs is.."Women! Wat can u say?Who made 'em?God must hv been a fuckin' genius!"

## "ரஹ்மான் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" A.R.R strikes again with double Grammy awards. நீ கலக்கு தலைவா!!!

## IPL - CSK Vs MI : ஏதோ உள்குத்து இருக்கோ? ஊதா சட்டைக்காரய்ங்க வேணுமினே மஞ்ச சட்டைக்காரய்ங்களுக்கு விட்டுகுடுத்த மாதிரி இருந்தது.

## India in T20 worldcup: "W.Indies... Send India back to home in their undies" என கமெண்ட் எழுதிய அட்டையை உயர்த்தி பிடித்திருந்தார் ஒரு மே.இ தீவு அணியின் ரசிகர்.
அவர் எதிர்பார்த்தது போன்றே மே.இ தீவு இந்தியாவின் டவுசரை கழட்டியது.
நேற்று மிச்சமிருந்த ஒட்டு துணியையும் உருவி விட்டது இலங்கை அணி. இவிய்ங்க (IND) விளையாடுற அழகைப் பார்த்து BP ஏறினதுதான் மிச்சம். :-(

## சகா ஒருவனிடம் என் அறிவுரை: "சமுதாயம் ஒரு சரக்கடிச்ச குரங்கு மாதிரி... அதைப் பத்தி கவலைபடாத". சொல்லி முடித்ததும் அடிக்க துரத்துகிறான். :-(

## இன்றொரு இண்டர்வியு.எடுத்தது அழகிய பெண்.அவளின் அதிநுட்பமான கேள்விகளுக்கெல்லாம் சரியாய் பதிலளித்தும் புன்னகைக்கவேயில்லை. VC++ =சாத்தான் மொழி
இனி வரும் சுற்றுகளை சமாளித்து தேறி எப்படியாவது அங்கு வேலையில் சேர வேண்டும், சிரிக்கும் போது அவள் எப்படி இருக்கிறாள் என பார்ப்பதற்கு. ;-)

## வெகுநாட்களுக்கு பின் சமைத்து,வீட்டின் கூரையேறி நிலாச்சோறு உண்டோம். அறைத்தோழன் ராஜாவின் புது மின் குக்கர் புண்ணியத்தில்.என்ன தவம் செய்தனை.

## கொடியிடை பெண்ணுக்கு கொங்கைகள் வளமாய் இருப்பது + அவள் உங்களை பார்த்து சிரிப்பது = மேஜிகல் ரியலிசம்.

சில நாட்களாய் மேக மூட்டத்துடன் விடியும் சென்னை நகரத்துக் காலையொன்றில் ட்விட்டிய 'பீலிங்கு' கவிதை


ஒன்றாய் தேநீர் அருந்த

கழுத்தோர வாசம் நுகர்ந்து முத்தமிட

காதல் மொழி பேசி உருக

யாரையாவது காதலித்துத்

தொலைந்திருக்கலாமெனத் தோன்றுகிறது,

ரம்மியமான மழை சூழ் காலை வேளைகளில்.

காமம் வழிந்தோடும் பனிக் காலம்






1.

நேற்றைய கனவில் உனைப் புணர்ந்து
களித்ததை கவிதையாயெழுத முடிவெடுத்தேன்.
மெல்லிய அணைப்பில் பகிர்ந்த
வெம்மையான முத்தங்களோடு துவங்குகிறது கவிதை.
உன் வனப்பு மிகு கொங்கைகளையும்,
ஆழ்ந்த முயக்கப் பொழுதுகளில் உன் முனகலையும்
பற்றி சில வரிகள் சேர்த்தாயிற்று.
கவிதை முழுமையுறும் வேளையில்,
எனதறையில் உன் வாசம் பரவ
கவிதைக்குப் பின்னாலிருந்து உன் விசும்பல் சத்தம்.
வார்த்தைகளைக் கலைத்து விட்டு
உனைத் தேடி கவிதைக்குள்ளிறங்கும் என்னைத்
தீராக் காமத்துடன் கட்டிக் கொள்கிறாய்.
முத்தங்களோடு தொடங்கும் மற்றுமொரு
கூடலின் வெப்பத்தில் எரிந்தழிகிறது
நிகழையும் கனவையும் பிரிக்கும் சுவர்.
காத்திருக்கிறது கவிதை.. அதன் முடிவிற்காக.


===========================


2.

நீ வராத நாட்களின் தவிப்புகளும்
உனைக் கண்டதும் பரவும் மகிழ்ச்சியும் சேர்ந்து
உன் மீதான ஈர்ப்பிற்கு
காதலெனப் பெயரிட்டுச் சிலிர்த்துக் கொண்டன.

பின்பொரு பனிக்கால மாலையில்
பெண்மை ததும்பும் நடையால் அசையும்
உன் பிருஷ்டத்தின் சிறு மென் அதிர்வுகளில்
காதல் எனும் பெயர் தடமழிந்து மறைய,
மெலிதாய்ப் புன்னகைக்கிறது
சாஸ்வதமாய் உள்ளுறைந்திருக்கும் காமம்.


===========================


3.

உடலதிர முயங்கிக் களைத்த
முதல் புணர்தலுக்கு பின்னர்,
தளும்பும் உன்னிரு முலைகளுக்கு நடுவே
வழிந்திறங்கும் வியர்வைத் துளியொன்றில்
கரைந்தோடுகிறது,
பதின்ம வயது முதல் சேர்த்து வைத்த
என் காமமும் வேட்கையும்.

அங்காடித் தெரு - விளிம்பு நிலை மனிதர்களின் கதை

என்றாவது தி.நகர் அடுக்கு மாடி ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும் வேட்கையின் நடுவே நெல்லைத் தமிழ் மணக்கப் பேசும் பணியாளர்களையும், அவர்களுக்கென இருக்கும் வாழ்வையும் பற்றி நினைத்ததுண்டா? நினைக்க கற்றுத் தருகிறது அங்காடித் தெரு. நூறு பேரை அடித்து வீழ்த்தி, பஞ்ச் டயலாக் பேசி, வெளிநாடுகளில் பாட்டுக்கு நடனம் ஆடும் தல/தளபதி நடிகர்களுக்கும் இவ்வளவு நாள்(வருடங்கள்) விசிலடித்து கை தட்டிய நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சில குறைகள் இருப்பினும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் வரிசையில் இதுவும் உண்டு என தைரியமாய் சொல்லலாம்.





பெரும்பான்மையாய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து, இத்தகைய அடுக்கு மாடி ஸ்டோர்களுக்கு பணி செய்ய அழைத்து வரப்படும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் சிடுக்குகள் நிரம்பிய வாழ்வை ரத்தமும் சதையுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தந்தையை இழந்து கல்லூரி படிப்பு சாத்தியபடாமல் இங்கு பணி புரிய வரும் கதாநாயகனுக்கும், வீட்டின் பொருளாதார சுமை காரணமாக இங்கு பணி செய்யும் கதாநாயகிக்கும் இடையேயான யதார்த்த வாழ்வை, அவர்கள் தங்குமிடத்தில் துவங்கி, உணவு, பணி சுமை, அவர்கள் நடத்தப்படும் முறை என எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

எடுத்துக் கொண்ட கதையும், அதற்கு வலு சேர்க்கும் ஜெயமோகனின் வசனங்களும் காத்திரமாய் இருக்கிறது. ஒன்றி படம் பார்க்கும் எவரையும் உலுக்கும் காட்சிகள் நான்கைந்து உண்டு. புதுமுக நாயகன் நன்றாய் நடித்திருக்கிறார். பருத்தி வீரன் ப்ரியாமணிக்குப் பிறகு ஒரு அடர்த்தியான கதாநாயகி வேடத்தை தன் அபார நடிப்பால் நிறைவாய் செய்திருக்கிறார் அஞ்சலி. சராசரியான ஒளிப்பதிவும், மோசமான பின்னணி இசையும் தரத்தை வெகுவாய் பாதித்தும், தனது கதையால்/உழைப்பால் சரி செய்திருக்கிறார் இயக்குனர். மசாலா பார்முலாக்களில் இருந்து விலகி ஒரு சாதாரண கதையம்சத்துடன் படம் எடுப்பதே சாத்தியமில்லாத தமிழ் சினிமா சூழலில், புதிய மாற்று திசை நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தை இன்னும் முன்னெடுத்து செல்கிறது அங்காடித் தெரு. இம்மண்ணின் மக்கள் நடமாடும் கனமான கதையை கொண்ட இப்படம் விமர்சனங்களால் ஆராயப்பட வேண்டிய படமல்ல.

தமிழ் சினிமா இதுவரை கட்டமைத்த அதிவீர கதாநாயக பிம்பங்களும், அர்த்தமற்ற க்ளிஷேக்களும் இப்படத்தின் வெற்றியில் உடைந்து நொறுங்கட்டும். வசந்தபாலனுக்கும் அவருடைய உதவி இயக்குனர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

வனம் புகுதலின் துவக்கம்



"
கிழக்குச் சீமையிலே" படத்தில் விஜயகுமார் Vs நெப்போலியன் பஞ்சாயத்து காட்சியின்போது, 'தாய் மாமா' எனும் உறவின் பெருமைகளை பக்கம் பக்கமாக ரவுண்ட் ட்ராலி ஷாட்டில் விஜயகுமார் பேசும் வசனங்களை கவனத்துடன் நினைவு கூர்கிறேன். 'ஏன்'னு கேக்குறீங்களா ? சிச்சுவேஷன் அப்படி. மிக மகிழ்ச்சியான சேதி. தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சென்ற வாரம். தாயும் சேயும் நலம்.
பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை என் கைகளில் ஏந்துவது இதுதான் என் வாழ்வின் முதல் முறை.
குழந்தை அவ்வளவு அழகு. என் தலையை விளையாட்டு மைதானமாக்க இது நாள் வரை கொட்ட வைத்த முடியெல்லாம் மருமகளுக்கு கொடுத்து விட்டார் போலும் கடவுள். தலைமுடி மிக அடர்த்தியாய். பகலெல்லாம் தூங்கி, பின் இரவெல்லாம் அழுகிறாள். பகலில் கண்கள் மூடி தூங்கும் போதும் சில நேரங்களில் புன்னகைக்கிறாள். "கடவுள் அவளுக்கு கதை சொல்லிட்டு இருக்காரு... அதனாலதான் சிரிக்கிறா. நீ டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நில்லு" என்கிறாள் என் தங்கை.


%%%%%%%%%%%%%%%%%%


சென்ற மாதம் ஒரு வாரயிறுதியில்,சென்னை ட்ரெக்கிங் கிளப்(CTC) நண்பர்களுடன்(~25 பேர் ), பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் காடு-மலை என சுற்றி திரிந்தேன் . இந்த CTC என்பது, லாப நோக்கில் இயங்கும் அமைப்பு அல்ல. செலவுகளையும் பொறுப்புகளையும் சமமாய் பங்கிட்டு, தன் முனைப்புள்ள, சுற்று சூழல் அக்கறையுள்ள ஆர்வலர்கள் நிரம்பிய, தனக்கு தானே சீரான விதிகள் வரையறுத்து கொண்டு மலையேறும்/ஊர் சுற்றும் குழு. 80% பொட்டி தட்டும் நண்பர்கள். பல ட்ரெக்கிங் ட்ரிப் அனுபவம் பெற்ற சங்கத்து சிங்கம் பாலா என்னையும் சேர்த்து விட்டான்.


இரண்டு நாட்களில் காடு மலை என 25 கிமீ சுற்றியிருப்போம். போகும் வழியில் ஒரு சின்ன அருவி குளியல், யானை துரத்த தெறித்து ஓட்டம், ஒரு கிராமத்தின்(சேத்துமடை) அரசு பள்ளியில் உடனடி அனுமதி வாங்கி அங்கு 'sleeping bag' உதவியுடன் இரவு உறக்கம், சில அரிய வகை விலங்குகள், சராசரிக்கு அதிகமாய் உடலுழைப்பு கோரும் மலையேற்றம், செங்குத்தான மாற்று பாதை வழியாக கண்ணை கட்டிய மலையிறக்கம்(?!) என்று கலந்து கட்டிய பல அனுபவங்கள். நிறைய கற்றுக் கொண்டேன்.
மதங் கொண்ட யானை துரத்திய நிகழ்வு மரண பயம் என்னவென்று உணர்த்தியது. குளித்து முடித்த பின் சிறு சிறு குழுவாய் பிரிந்து மாலை பொழுதில் அடர் வன சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் வந்த இரண்டு டூ வீலர் அன்பர்கள் "யானை துரத்துது... ஒடுங்க" என எங்கள் நால்வர் குழுவை கடுமையாக எச்சரித்தனர். என்னுடன் இருந்த மூவர் அந்த இரு வண்டிகளில் ஏறி கிளம்ப, ஏறி பதுங்க மேடு எதுவும் இல்லாத அந்த சம தள வனத்தில் தெறித்து ஓட ஆரம்பித்தேன். சாலை வளைவுக்கு பின்னிருந்து பிளிறல் சத்தம். என்ன புண்ணியமோ... எச்சரித்து முன் சென்ற TVS50 காரர் மீண்டும் நிறுத்தி என்னையும் ஏற்றி கொள்ள தப்பித்தேன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன். இந்த குழுவில் சேரும் போதே, "எந்த விதமான சேதாரத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல" அப்படின்னு சொல்லி ஒப்புதல் வாங்கிட்டுதான் சேர்ப்பாய்ங்க. நியாயம்தான பாஸ்?


%%%%%%%%%%%%%%%%%%


வி.தா.வருவாயா பாடல்கள் வந்ததுலேர்ந்து ரெக்கார்டு தேயத்தேய கேட்டாச்சு. முதல்ல கொஞ்சம் பிடித்த இப்படத்தின் இசை, ஒரு புள்ளியில் சுற்றி வளைத்து உள்ளிழுத்து கொண்டது. 'ஹோசானா' , 'ஓமனப் பெண்ணே' மற்றும் 'மன்னிப்பாயா' எனக்கு பிடிச்சது. மற்ற பாட்டுகளும் நல்லாயிருக்கு. 'ஆரோமலே'ன்னு ஒரு புது வெரைட்டி பாட்டு. அசத்துகிறார் அற்புத ரகுமான். படம் சீக்கிரம் பார்க்கணும். நான் மிகவும் எதிர்ப்பார்த்த தாமரை ஒரு சில இடங்களில் 'அட' போட வெச்சாலும், எதிர்பார்த்த அளவிற்கோ(அ) 'வாரணம் ஆயிரம்' அளவிற்கோ கலக்கவில்லை.
ஸ்ரேயா கோஷல் பற்றிய என்னோட ட்விட்டர் கமெண்ட்:
உலகின் உயர்தர ஒயின் வகைகளை சுவைக்க வேண்டும் என ஆர்வம் உண்டு. இன்னும் கைகூடவில்லை. வி.தா.வ படத்தின் "மன்னிப்பாயா ..." பாடலில்...ஸ்ரேயா கோஷல் குரலை கேட்ட பின்பு அந்த ஒயின் வகைகள் இப்படித்தான் இருக்குமோவென நினைத்துக் கொள்கிறேன்.


%%%%%%%%%%%%%%%%%%


Strokes of Love

பகல் பொழுதுகளில், மெதுவாய்
கூடுகள் சுமந்தலையும் சிறு நத்தைக் கூட்டத்திற்கு
நிழல் பரப்பி இணையாய் நகர்ந்து
வெப்பம் தணிக்கிறாள் ஒரு சிறுமி.

மழை நாளொன்றில் ஒற்றைக் குடையை
மகனுக்களித்து விட்டு,
சேலைத் தலைப்பால் தலை மூடி நனைந்து கொண்டே
மகனுடன் சாலை கடக்கிறாள் இளம் தாயொருத்தி.

இரை தேடித் திரியும் அணிலைக் கையிலெடுத்து
தன் சட்டை
நுனியில் பால் நனைத்து
துளிகளாய்ப் பிழிந்து ஊட்டுகிறார்
நடைபாதையில் வசிக்கும் முதியவரொருவர்.

துயருறும் பொழுதுகளிலெல்லாம்
விழி மூடி மடி சாய
முடி கோதி முத்தங்கள் தர
வேண்டும் உனைப்போல் காதலியொருத்தி.

இவர்களைப் போன்ற சிலர் தரும்
பேரன்பு எனும் விசையால்
இன்னும் சமன் குலையாமல்,
சுழன்று கொண்டிருக்கிறது ஓர் உலகம்.


பாஸ்... பாஸ். கோபப் படாதீங்க. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்சன். என்னோட அலுவலகத்தில "இது காதல் வாரம்" அப்படின்னு மெயில் விளம்பரம் பண்ணி பல போட்டிகள் நடத்தினாய்ங்க. ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகள் ஐந்தில் கவிதை போட்டி வேற. விட்ருவோமா? பச்சை மஞ்ச கருப்பு பிங்க் தமிழனாகிய நான், தமிழ் பிரிவில் கலந்துகிட்டு கொடுத்த தலைப்புக்கு தாவாங்கட்டைய தடவி யோசிச்சு யோசிச்சு எழுதினதுதான் மேலே. கவிதைங்குற பெயரில் நான் பண்ண இந்த அராஜகத்துக்கு ரெண்டாவது இடம் வேற... எப்பூடி? பரிசு தான் இன்னும் கொடுக்கல. 'Cinthol' சோப்பு வைக்கிறதுக்கு வகையா ஒரு சோப்பு டப்பாவை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். :)

அற்புதமான ஒரு திரைப்படம் - "Spring, Summer, Fall, Winter... and Spring"

முடிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் 2009-ஆம் வருடம், அதற்கு முந்தைய சில வருடங்களைப் போல இல்லாமல், பல திருப்பங்களும் நிகழ்வுகளும் (எனக்கு தனிப்பட்ட முறையில்) கொண்டிருந்தது. இவ்வருடத்தில் எந்தவொரு முன் திட்டங்களுமின்றி இயல்பாய் வந்த ஒரு பழக்கம், 'நல்ல படங்கள் (அ) உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது'.சில ஆண்டுகளுக்கு முன், ஆனந்த விகடனில் செழியன் எழுதிய 'உலக சினிமா' தொடர்தான் எனக்கான முதல் அறிமுகம். பின் இணையமும், தமிழ் வலைப்பூக்களும்.'உலக சினிமா' தொடர் வாசிக்கும் பொழுது அப்படங்களை பார்க்க ஆரம்பிக்காவிட்டாலும் இவ்வருடம் எல்லாம் ஒன்றாய் அமைந்து வந்ததில் பார்க்கத் துவங்கி விட்டேன்.

"டேய்.. நீ மத்தவங்களுக்குதாண்டா மாஸ்... எனக்கு வெறும் தூசு...தூசு!" போன்ற சிரிப்பூட்டும் பஞ்ச் டயலாக்குகள் கொண்ட அதீத மொக்கை மசாலா படங்களும், மோசமான திரையரங்குகளும் (பெரும்பாலான சமயங்களில் இவிய்ங்களே 80/100 ரூபாய்க்கு பிளாக்ல டிக்கெட் விப்பாய்ங்க...சிறந்த உதாரணம்: கே.கே நகர் உதயம் )ஏற்படுத்துகிற சலிப்புணர்வு நிரம்பிய எந்த ஒரு ஜீவராசிக்கும் உள்ள மிகச் சிறந்த மாற்று வழி 'உலக சினிமா'. சமீப காலங்களில் நல்ல தமிழ் படங்கள் வருகிற ஆரோக்கிய சூழலையும் மறுக்க முடியாது, எனினும் அது மிக மிகக் குறைந்த சதவீதமே.

இவ்வருடத்தில் பார்த்த மிக சிறந்த ஒரு படத்தை பற்றிய என் பார்வை கீழே.

Spring, Summer, Fall, Winter... and Spring

"சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்

சிறுகச் சிறுக விடுத்து
ச் செல்வது
சாம்பலை மட்டுமே!
"

என்றொரு ஜப்பானிய ஜென் கவிதை உண்டு.(யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்தது). மனிதன் தன் வாழ்வில் அன்பு,எதன் மீதும் பற்று இல்லாமல் வாழ முடியுமா? அப்படி வாழ்வதுதான் துன்பமின்றி இருப்பதற்கான வழி என்ற புத்த மத கோட்பாட்டை மிக அற்புதமான முறையில் விவரிக்கிறது இந்த கொரிய மொழி படம். மனித வாழ்வை நான்கு படி நிலைகளாக பிரித்து, அவற்றை கால நிலை சுழற்சியிலுள்ள நான்கு பருவங்களுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் உக்தியில், இந்த படம் மிக சிறந்த திரை அனுபவத்தை தருகிறது. படத்தின் மொத்த வசனங்களையும் ஒரு வெள்ளை காகிததில் ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். இயக்கியவர் - மிக புகழ் பெற்ற கொரிய இயக்குனர் கிம் கி டுக். (Kim ki Duk). அசாத்தியமான அழகியல் உணர்வுடன் கூடிய இப்படத்தின் ஒளிப்பதிவை போன்று இது வரை நான் எந்த படத்திலும் கண்டதில்லை. ஒளிப்பதிவு : Dong-hyeon Baek




வசந்த காலம்:
இரு பசுமையான மலைகளுக்கிடையே அமைதியான ஓர் ஏரி.அந்த ஏரியின் நடுவில் மரத்தாலான சிறிய அழகிய மிதக்கும் வீடு (அ) ஆசிரமம். அங்கிருக்கும் வயதான புத்த துறவியும், ஒரு சிறுவனும் காலையில் எழுந்து படகில் கரைக்குச் சென்று மருந்திற்கான மூலிகைகளை பறித்து விட்டுத் திரும்புகின்றனர். மறுநாள் சிறுவன் பொழுதைக் கழிக்க கரைக்கு தனியே வந்து சுற்றியலைகிறான். அங்கிருக்கும் ஒரு குட்டையில் தான் பிடித்த ஒரு மீன், ஒரு தவளை மற்றுமொரு பாம்பு என ஒவ்வொன்றின் உடலிலும் நூலால் கல்லை கட்டி விடுகிறான். இவை துன்பபடுவதை கணடு சிறுவன் சிரிக்க, இதை மறைந்திருந்து துறவி கவனிக்கிறார். இரவு சிறுவன் தூங்கும் போது அவன் முதுகில் துறவி ஒரு பெரிய கல்லை கட்டுகிறார். காலையில் எழும் சிறுவன் துறவியிடம் கல்லை எடுத்து விடுமாறு கெஞ்சுகிறான். "முதலில், உன்னை போன்று சிரமபடும் அந்த உயிரினங்களை விடுவி. ஆனால் எதவாது ஒன்று இறந்திருந்தாலும் அந்த சுமை வாழ்நாள் முழுதும் உன் மனதில் இருந்து நீங்காது" என்கிறார். தவறை உணர்ந்த சிறுவன் மீன்டும் குட்டைக்கு வந்து தேடி தவளையை விடுவிக்கிறான். மீனும், பாம்பும் இறந்து கிடப்பதை கண்டு வருந்தி அழுகிறான். இதையும் துறவி மறைந்திருந்து பார்த்து கொண்டிருக்கிறார்.

கோடைக்காலம்:
சிறுவன் இப்போது இளைஞன் (அ) இளம்துறவி ஆகியிருக்கிறான். ஒரு பெண்மனி தனது இள வயது மகளுடன், மூத்த துறவியை சந்திக்க வருகிறாள். தனது மகள் சிறிது உடல் நலம் குன்றியுள்ளதால், அவளை சிகிச்சைக்காக அங்கேயே விட்டு செல்கிறாள். மறுநாள், இளம்பெண் தனியே மழையில் நனைந்து கொண்டு வெளியில் அமர்ந்திருப்பதை கண்ட இளைஞன் ஒரு கூடையை எடுத்து, அவள் தலைக்கு மேல் குடை போல் பிடிக்க, அவள் புன்னகைக்கிறாள். பின்பொரு நாள் அவள் உடை மாற்றுகையில், எதேச்சையாய் பார்க்க நேர்ந்த இளம்துறவியின் எண்ணம் அலைபாயத் தொடங்குகிறது.மறுநாள் இளைஞன் படகில் கரைக்கு செல்லும் போது 'நீயும் வருகிறாயா?' என கேட்க அவள் மௌனமாக படகில் ஏறி அமரவும், கரைக்கு செல்கின்றனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி ஒரு சிற்றருவியின் அருகே ஓரிடத்தில் அவளை புணர்கிறான். அவர்களுக்குள் ஈர்ப்பு அதிகமாகிறது. பின்பொரு நாள், துறவி தூங்கி கொண்டிருக்க, இளைஞனும் யுவதியும் விடிவதற்கு முன்பே படகிலேறி ஏரியை சுற்றுகின்றனர். பின் படகிலேயே இருவரும் புணர்ந்து களைத்து உறங்குகின்றனர்.காலையில் இதை கண்ட துறவியிடம், இளைஞன் மன்னிப்பு கேட்கிறான். 'இது இயற்கைதான்' என்கிறார். துறவி பின்பு அந்த பெண்ணிடம் திரும்பி, 'இன்னும் உனக்கு உடல் நலமின்றி இருக்கிறதா?' என கேட்க, அவள் 'இல்லை' என்கிறாள். 'நீ கிளம்பலாம்' என்கிறார். பெண் கிளம்ப இளைஞன் அதை தடுக்க முடியாமல் தவிக்கிறான். அவள் சென்ற மறுநாள் விடிவதற்கு முன்பே, தூங்கும் துறவியை வணங்கி, பின் புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு அவளைத் தேடிக் கிளம்புகிறான்.

இலையுதிர்க் காலம்:
துறவி இன்னும் முதுமையடைந்து தனியே வசிக்கிறார். ஏதொ ஒரு பொட்டலத்தை பிரிக்கும் போது அதை சுற்றியுள்ள செய்தி தாளில் 'தன் மனைவியை கொன்று விட்டு தப்பித்த கணவன்' என்ற செய்தியுடன் இளம் துறவியின் புகைபடத்தை காண்கிறார். மறுநாள் நாகரீகமான இளைஞன் தோற்றத்தில் தன்னுடைய சீடன் ஆசிரமத்திற்கு வருகிறான். அவனிடம் துறவி பேசுகிறார்.'அவள் மேல் மிகுந்த அன்பிருந்தது. அவள் இன்னொருவனுடன் செல்ல முயன்றதால் கொன்றேன்'என்று கோபத்தில் கத்துகிறான். அவன் மன அமைதிக்காக, ஒரு புத்த மத சூத்திரத்தை மர பலகையில் எழுதி விட்டு, 'இதன் ஒவ்வொரு எழுத்துக்களையும் கத்தியால் கீறி செதுக்கு. அதன் வழியே உன் ஆத்திரம் குறையும்' என்கிறார் துறவி. சீடன் செதுக்க துவங்குகிறான். அவனை கண்டுபிடித்து கைது செய்ய இரு போலீஸ் அதிகாரிகள் வந்து விடுகின்றனர்.'இப்பணி அவனுக்கு மன அமைதியை கொடுக்கும். அவன் அதை முடித்ததும் கைது செய்யுங்கள்' என துறவி கேட்டு கொள்கிறார். இரவு முழுதும் எழுத்துக்களை செதுக்கி, களைத்து தூங்கி சரிகிறான். காலையில் அவனை கைது செய்து கூட்டிச் செல்கின்றனர். பின், துறவி படகில் விறகுகளை அடுக்கி தீயிட்டு, தன் கண்களிலும், வாயிலும் எழுத்துகள் எழுதப்பட்ட காகிததை இறுக்கமாக ஒட்டி, தீயின் மேல் அமர்ந்து தன் உயிரை மாய்க்கிறார்.

குளிர் காலம்:
பனி மழை பெய்து கொண்டிருக்க, ஏரி பனிப்பாளமாக உறைந்திருக்கிறது. சிறை சென்ற இளைஞன், தனது நடுத்தர வயதில் மன முதிர்வுடன் ஒரு துறவியாக விடுதலையாகி ஆசிரமத்திற்கு வருகிறார். மூத்த துறவி இறந்ததை உணர்ந்து படகை வணங்குகிறார். பின் ஆசிரமத்திலுள்ள ஒரு புத்தகத்தை எடுத்து அதிலுள்ள புத்த மத தியானம் மற்றும் தற்காப்பு முறைகளை தீவிரமாக கற்கிறார். பின்பொரு நாள் கைகுழந்தையுடன் தன் முகத்தை மறைத்தபடி ஆசிரமத்துக்கு ஒரு பெண் வருகிறாள்.புத்தர் சிலை முன் மண்டியிட்டு அழுகிறாள். அன்றிரவு தங்கும் பெண், தன் குழந்தையை அங்கேயே விட்டு வெளியேறும் போது, பனி ஏரியின் ஒரு குழிக்குள் தவறி விழுந்து இறக்கிறாள். துறவி குழந்தையை எடுத்து வளர்க்கிறார். தனது சிறு வயது தவறுகளுக்காக வருந்தி ஒரு பெரிய கல்லை இடுப்பில் கட்டி கொண்டு கையில் புத்தர் சிலையுடன் கடினமான பாதையில் காயங்களுடன் மலையேறுகிறார். மலையில் ஓரிடத்தில் அந்த கல்லை பீடமாக்கி அதன் மேல் புத்தர் சிலையை வைத்து வணங்குகிறார்.

மற்றுமொரு வசந்த காலம்:
நடுத்தர வயது துறவி முதுமையடைகிறார். அக்குழந்தை சிறுவனாகி விளையாடிக் கொண்டிருக்கிறான். ஒரு ஆமையைக் கையிலெடுத்து குச்சியால் குத்தி பார்க்கிறான். துறவியின் சிறு வயது மன நிலை இப்போது அச்சிறுவனிடத்தில். இந்த வாழ்க்கை சுழற்சியைக் காணும் மௌன சாட்சியாக மலை முகட்டில் புத்தர் சிலை மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருக்க படம் நிறைவடைகிறது.



ஒவ்வொரு பருவத்திலும் நடக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வைப் பற்றிய ஓர் ஆழ்ந்த பார்வையை முன் வைக்கிறது. படகு, துறவி இறந்ததும் நீரிலிருந்து வரும் பாம்பு, இளைய பருவத்தில் வரும் சேவல்.. என அர்த்தமுள்ள குறியீடுகள் படம் முழுதும் வருகின்றன. ஜென் கவிதைகள் சில வரிகளில் ஆழ்ந்த அர்த்தங்களை உணர்த்தும். அந்த வகையில், இப்படம் ஒன்றரை மணி நேர ஜென் கவிதை! படம் நிறைவடையும் போது சொல்லில் விவரிக்க இயலா ஓர் உணர்வு மனதில் நிரம்பும். இன்னும் பேச்சு எதற்கு? படத்தை ஒரு முறை பார்த்து, உணருங்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! :)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 3rd AC டிக்கெட்டும் ஐம்பது ரூபாய் கைப்பணமும்

இதே மாதிரி கொஞ்சம் இடைவெளி கூட இல்லாம, எப்பவுமே ஆணி புடுங்கிட்டு இருந்தா, அடுத்த பிறவி முழுவதும் புதுகை புயல் J.K. ரித்தீஷ் நடித்த படங்களை மட்டுமே கண்டு இன்புறுவாய் என, கனவில் ஒரு துர் தேவதை சபித்ததையடுத்து, பதறிப்போய் ஊருக்கு கிளம்ப தீர்மானித்தேன்.

IRCTCல் துலாவியபோது தற்செயலாக சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் AC டிக்கெட் வெறும் 382 ரூபாய் மட்டுமே என கண்டு இன்ப அதிர்ச்சி. சாதாரண ஸ்லீப்பர் வக்குப்பு டிக்கெட்டை விட ரூ.100 மட்டுமே அதிகம் கொடுத்து 3rd AC எடுத்து விட்ட, எனது ராஜதந்திரத்தை கண்டு எனக்கே வியப்பு தாங்க முடியவில்லை.

பயண நாளன்று மாலை. அலுவலக நண்பர் 'நான் உன்னை கிண்டில இறக்கி விடுறேன்யா' என சொல்ல, கிண்டியிலிருந்து 20 நிமிடத்தில் எக்மோரை அடையலாம் என மனக்கணக்கு போட்டு தெனாவெட்டாக தாமதமாக 7.20 க்கு கிளம்பினேன் . 8.25-க்கு நம்ம ட்ரெய்ன். ஒரு மணி நேரத்தில் O.M.R ரோட்டிலிருந்து எக்மோர் போகணும்!! அதுவும் பரபரப்பான மாலை நேர போக்குவரத்து நெரிசலில்.

நன்பருடன் பைக்கில் கிளம்பியதும் சிறு தூரல். "செம ரொமான்டிக் ஒபனிங்கா இருக்கே!"னு நினைச்சு மூனு நிமிஷத்துல, டைடல் பார்க் சிக்னலில் செம ட்ராபிக். தூரல் மழையாக மாறி புரட்ட ஆரம்பிச்சிருச்சு.

"என்னயா... இப்படி பெய்யுது?!?!"

"சரி ராம்... கிண்டி வரைக்கும் போக வேண்டாம். மத்திய கைலாஷ் - கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன்ல என்னை இறக்கி விட்டுட்டு, நீங்க ஒரங்கட்டிட்டு நனையாம இருங்க. நான் அங்கேயிருந்து எக்மோர் போயிடறேன் "

கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன். மணி 7.35
இந்த ரூட் கிண்டி மாதிரி கிடையாது. எக்மோர் போகனும்னா ரெண்டு ட்ரெய்ன் மாறணும். 7.45 MRTS ட்ரெய்ன் இன்னும், 7,50 ஆகியும் வரலை.

'இவிய்ங்க ஏன் இப்படி ரூட் வெச்சிருக்காய்ங்க... எக்மோரையும் பறக்கும் ரயில் ரூட்ல கொண்டு வந்திருக்கலாம்... முட்டா பசங்க'
'சரியான நேரத்துக்கு வரவே மாட்டாய்ங்க... லூ#$% *&^@$'
'பேசமா வெளில போய் ஆட்டோ பிடிக்கலாமா?!?! இந்த மழைல ஏதாவது மொக்கை ட்ராபிக்ல மாட்டிடோம்னா?? ட்ரெய்ன்லயெ போவோம் '

இப்படி திட்டிட்டே இருக்க, 7.58-க்கு சாவகாசமா வருது.
'இன்னும் 25 நிமிஷத்துல எக்மோரா? ஆவுறதில்லை'னு நினைச்சிட்டு உள்ள ஏறிட்டேன். பேருதான் பறக்கும் ரயில். நம்ம ஊருக்குள்ள ஒடுற மினி பஸ் மாதிரி 30 கி.மீ வேகத்துலதான் போறாய்ங்க.
நாலு ஸ்டேஷன் தான்டிண பிறகு மழையே இல்ல.

'எக்மோருக்கு ரெண்டாவது ட்ரெய்ன் பிடிக்கிறதுக்கு பதிலா, பார்க் ஸ்டேஷன்ல இறங்கி ஆட்டோ பிடிக்கலாம்.'
'இல்ல..இல்ல.. பார்க்குக்கு முன்னாடி சிந்தாதிரிபேட்டைலயே இறங்கினா தூரமும், நேரமும் குறையும்'


சிந்தாதிரிபேட்டை. மணி 8.18.
'இன்னும் ஏழு நிமிஷம் தான் இருக்கு. ஓட்டத்தை ஆரம்பிடா கைப்புள்ள'.
ஆது ஒரு ஈயாடுற ஸ்டேஷன். அங்கேயும் விஜயகாந்த் பட போலீஸ் சேஸிங் சீன் மாதிரி நான் ஓட, அங்க இறங்குன நாலு பேரும் என்னை ஒரு மாதிரியா பார்த்தாய்ங்க.

வெளில வந்து பார்த்தா ஒரே ஒரு ஆட்டோ. காது குடைஞ்சிட்டு இருந்த ஆட்டோக்காரரை எக்மோர்னு சொல்லி கிளப்பியாச்சு.

எக்மோர் வந்ததும் 30 ரூபாயை அவர் கையில் திணித்து விட்டு, மெதுவாக சென்ற ஆட்டோவிலிருந்து ரன்னிங்ல இறங்கும் போது 8.25.
"இன்னிக்கு ஆப்புதாண்டா"னு சொல்லிட்டே எந்த பிளாட்பார்ம்னு பார்க்க போனா, அந்த போர்டுல நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பேரே இல்ல. விசாரணை கவுண்டர்-ல கேக்கலாம்னு பார்த்தா ஏறகெனவே ஆறேழு பேர் சுத்தி நிக்கிறாய்ங்க.
'சரி... உள்ள போயி யார்ட்டயாவது கேக்கலாம்'

நுழைந்ததும் முதலில் இருக்கும் பிளாட்பார்ம்ல வரிசையா இருக்குற LED display ல வண்டி எண் 0607. 'எங்கேயொ பார்த்த நம்பர் மாதிரி இருக்கெ ?!?!'
பக்கத்துல இருக்குற ட்ரெய்ன் கோச்ல போர்டு 0607 சென்னை <<==>> நாகர்கோவில்.
'சூப்பர் அப்பு..'... அப்போ நம்ம நாலாவது கோச் எங்க?!?!. உத்து பார்த்தால் அட அதுவும் இது தான். உள்ள ஏறின உடனே வெளிய திரும்பி பார்த்தால் வண்டி நகர ஆரம்பிச்சிருச்சு. மணி 8.26!!!


ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாட!!!


பந்தாவா உள்ள போறேன். அந்த கோச்ல கடைசி சீட் எனக்கு!. பார்த்ததும் செம கடுப்பு. ஒவ்வொரு compartment லயும் பக்கத்துக்கு மூணு அப்படின்னு ஆறு சீட் இருக்கும் ஆனா இதுல ஒரு பக்கம் இருக்குற மூணு சீட்டோட அந்த கோச் முடிஞ்சு போச்சு. அதாவது சாதரண compartment ல நடுவுல ஒரு தடுப்பு வெச்சா எப்டி இருக்கும்? செம இடைஞ்சல். ஜெயில்ல இருக்குற பீலிங்.

போர்வை தலையணை எல்லாம் தருவாய்ங்கனு பார்த்தா, 25 ரூபா தரணுமாம். சட்டை பையை துலாவினதும்தான் தெரிஞ்சது நம்ம கிட்ட மொத்தம் இருக்கிறதே 50 ரூபா. கிளம்பின அவசரத்தில ATM ல எடுக்க மறந்துட்டேன். இதுல நான் சாப்பாடு + தண்ணி பாட்டில் + போர்வை தலையணை வாங்கணும். முதல் ரெண்டு வாங்கி முடிச்சதும் மிச்சம் இருந்தது ஏழு மதிப்புள்ள இந்திய ரூபாய்கள் .
சரி... கைய முட்டு குடுத்து முரட்டு தனமா தூங்குவோம்னு மனசை தேத்தியாச்சு.

அப்பப்போ பக்கத்துல இருந்த ஒரு ஆன்ட்டி & பக்கத்துல இருந்த இன்னொருத்தர் கிட்ட பேசிட்டு வந்தேன். நடு சாமத்துல குளிர் தாங்க முடியாம வெளிய போயி நின்னுட்டு இருக்கும் போது நம்ம வயசுல ஒரு இளைஞர் பேச்சு துணைக்கு கிடைச்சார். அவர் ரயில் என்ஜின் துணை டிரைவராம். அவரும் மதுரைக்கு பயணித்து கொண்டிருந்தார். பல சுவாரசியமான விஷயங்களை சொன்னார்.

## இருக்கிறவய்ங்கள்ள பாதி பேரு(எல்லாரும் நம்ம தமிழ் மக்கள் தான் ) இங்கிலீஷ் பேசி டார்ச்சர் பண்றாய்ங்க. எப்படித்தான் இந்த ஒரு மனநிலை வருதுன்னு தெரியல. போலியான மேட்டுக்குடித்தனம்!!! "இவிய்ங்களையெல்லாம் ..........................." னு ஒரு உன்னதமான தண்டனைய மனசுல நினைச்சுகிட்டேன்
"இவிய்ங்க
(நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்) எப்பவுமே லேட்டாதான் போவாய்ங்க தம்பீ." என்று மதுரை தமிழில் பேசிய நபர் மட்டுமே ஆறுதல்.

## டெல்லியில் வசிக்கும் ஒரு அரசு அதிகாரியின் தமிழ் குடும்பம், சொந்த ஊரான நெல்லைக்கு செல்கிறது. அவருடைய மனைவியும், மகளும் வட இந்தியா/ டெல்லி பெருமைகளை சக பயணிகளிடம் வாய் வலிக்காமல் மொக்கை போட்டு கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் தமிழ். ஆனால் இவர்கள் பேசியதில் 70% ஆங்கிலம், 20% ஹிந்தி , 10% தமிழ். வட இந்திய நவராத்திரி கொண்டாட்டக்களில் துவங்கி பஞ்சாபி தாபா அடுப்பு எப்படி செய்கிறார்கள் வரை அவிய்ங்க அலப்பறை தாங்கல.

## ரயில் என்ஜின் துணை டிரைவருடன் பேசியதிலிருந்து,

# தற்போது சென்னை-விழுப்புரம் & மதுரை-திண்டுக்கல் மட்டுமே இருவழிப்பாதை. சென்னை - மதுரை முழுதும் இரு வழி ரயில் பாதை மற்றும் Electrification ஆகி விட்டால் ஆறு மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு போகலாம். சுமார் ஒன்றரை வருடத்தில் இப்பணி முடியலாம்.

# தற்போது கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் செயல்பட ஆரம்பித்ததும், அது ரயில்வேயின் கீழ் வராது. அது தனி சுய அமைப்பு .

# வயதான ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலானோர் மிகவும் பொறுப்பில்லாத மனநிலையுடன்தான் நடந்து கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் இளையவர்கள் பரவாயில்லை.

# இந்திய ரயில்வே துறை பயணிகள் போக்குவரத்தை ஒரு சேவையாகத்தான் செய்கிறது. அவர்களின் லாபம் சரக்கு போக்குவரத்தில்தான் அதிகம்.


சிறப்பு ரயில் என்பதால், நின்னு நின்னு இரண்டு மணி நேர தாமதமாக மதுரை வந்து சேர்ந்தது. அங்கிருந்து ஊருக்கு போகும் பஸ்சும் மெதுவாகவே சென்றது. (நம்மளை சுத்தி சதி பண்றாய்ங்களோ!?!?)

வழக்கமா ஊருக்கு போக11 மணி நேரமாகும். எல்லா டிரைவர்களின் புண்ணியத்திலும் வீடு வந்து சேர 14 மணி நேரம் ஆச்சு!!

மதுரைகாரர் சொன்ன "இவிய்ங்க எப்பவுமே லேட்டாதான் போவாய்ங்க தம்பீ."... ஊருக்கு போன பிறகும் கேட்டுட்டே இருந்தது!

அக்னி நட்சத்திரம் முடியும் வேளையில், அனல் பறக்கும் சில மொக்கைகள்

சென்ற வாரம் ஒரு சுப யோக சுப தினத்தில் என் ஆருயிர் தங்கையின் திருமணம் இனிதே நடந்தேறியது.ஒரு பொறுப்பான(?!) உடன்பிறப்பாய் என்னால் முடிந்த வரை கடமைகளை ஆற்றினேன். சாஸ்திரம், சம்பிரதாயம்-னு எத்தனை விஷயங்கள்... பெரும்பாலும் எல்லாமே பொண்ணு வீட்டுக்காரய்ங்களை உசுரை எடுக்குற மாதிரியே இருக்கு... ஷ்ஷ்ஷ்ஷ்... கண்ணை கட்டிருச்சு!!! சில சமயங்கள்ல இந்த மாதிரி சம்பிரதாயம் எல்ல்லாம் இன்னைக்கு சூழல்லயும் நாம பின்பற்றானுமா -ன்னு கேள்விகள் தோணிட்டு இருந்தது...

ம்ம்... அப்புறம் ஒரு மேட்டர்... மூச்சு முட்டுற வேலைகளுக்கு நடுவுல சில சமயம் மண்டபத்தை சுத்தி நோட்டம் விட்டதுல, மாப்பிள்ளை வீட்டு சொந்தக்கார பொண்ணு ஒண்ணு செம அழகா குடும்ப குத்து விளக்கு மாதிரி நின்னுட்டு இருந்ததை பார்துட்டோம்ல... அப்போ எந்த விதமான 'ஆக்கப்பூர்வமான நடவடிக்கை'யும் எடுக்கல (அல்லது) எடுக்க நேரம் இல்ல. அப்புறம் ஒரு நாள் தங்கச்சி கிட்ட அந்த பொண்ணை பத்தி கேட்டு, (ஏன்? எதுக்கு? ன்னு 108 எதிர் கேள்வி வேற ) கொஞ்ச தகவல் கிடைச்சது.


எல்லாம் 'smooth'ஆ இருக்கு. ஆனா நம்ம ராசியை நினைச்சாதான் டெர்ரர் ஆ இருக்கு. எந்த பொண்ணை சைட் அடிச்சாலும் அதிகபட்சம் ஆறு மாசத்துக்குள்ள அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுது... என்னத்தை சொல்ல!!!
ஆகவே பிரியமானவர்களே... பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே அந்த பொண்ணு கொஞ்ச நாள் 'Single' ஆகவே இருக்க வேண்டுமென எனக்காக ஆண்டவரிடம் மன்றாடி பிரார்த்தியுங்கள். நம் கூட்டு பிரார்த்தனைக்கு ஆண்டவர் மனம் இரங்குவாராக.

அட... ஆண்டவர் ஒன்னும் பண்ணலேன்னாலும் அந்த பொண்ணோட அப்பாவாவது மனசு இறங்கட்டும். So...நீங்க பிரார்த்தனை பண்ணுங்க. இது நடந்துட்டா அந்த கேப்-ல போர்க்கால வேகத்தில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள இந்த அரசு( நான்தானுங்க ) உறுதிபூண்டுள்ளது .... ம்ம்ம்... பார்க்கலாம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


இவிய்ங்க ஏன் இப்படி இருக்காய்ங்க?

கடந்த முறை தி. நகர் போனப்போ சரவணா ஸ்டோர்ஸ்ல சிலர் பண்ணுன அட்டூழியத்த பார்த்துட்டு தோணின கேள்வி இது. தி நகர் ல துணி வாங்கலாம்... நகை வாங்கலாம்... சமையலுக்கு வெண்டைக்காய், தக்காளி வாங்கணும்னா கூட அவ்வளவு கூட்டத்தையும் தாண்டி வந்து சரவணா ஸ்டோர்ஸ்ல தான் வாங்கனுமா? பெரும்பாலும் பெண்கள் தான்.

இதை பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. விலை எவ்ளோதான் கம்மியா இருந்தாலும், இது ஒத்து கொள்ள முடியாத விஷயமாக எனக்கு தோன்றியது. அவரவர் தெருவில் ஒரு அண்ணாச்சி கடையோ காய்கறி விக்கிற கிழவியோ இல்லையா? அவர்களை எல்லாம் தவிர்த்து இங்கு வந்து வாங்கி எத்தனை ஆயிரம் மிச்சம் பிடிக்கும் எண்ணமோ? மக்களின் இந்த மனப் போக்கு சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என நினைக்கிறேன்.
இது போன்ற சிறு விஷயங்கள் தொடங்கி பல சீரியசான விஷயங்களில், தமிழ் சமூகம் மிகப்பெரிய ஆட்டு மந்தை கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது...

நீங்க எதுக்கு அய்யா சரவணா ஸ்டோர்ஸ் போனீங்கன்னு கேக்குறீங்களா? எனக்கு பிடிச்ச 'perfume' வேற எங்கேயும் கிடைக்கிறதில்ல... அதனால தான் அங்க போக நேர்ந்தது. மத்தபடி இது போன்று திருவிழா கூட்டத்துக்கு நடுவில் 'purchase' செய்வதென்பது அலர்ஜியான விஷயமாக தோன்றி வருகிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

நிகழ்வுகளின் முடிச்சுகள்
கண் சிமிட்டலுடன் கூடிய
உன் சம்மதப் புன்னகைக்காக
நான் காத்திருக்கும் கணங்களில்...

மழையின் முதல் துளி வேண்டி
மேகம்
பார்த்து முற்றத்தில்
நின்றிருக்கிறாள்
ஒரு சிறுமி.
தனக்கான சொற்கள் தேடி
முற்றுப்பெறா கவிதையொன்று,
பெருவெளியில் அலைகிறது.
ஓடுடைத்து வெளி வர எத்தனிக்கிறது
வெளிர் நீலப் பறவைக் குஞ்சு.

நிகழ்வுகளின் முடிச்சுகள் மேலும் இறுக,
இவற்றின் விதி ரகசியம்
அறிந்த
காலம்
ஒரு நதியாக சலனமற்று
ஓடிக்
கொண்டிருக்கிறது...
உன் நெற்றிச் சுருக்கத்தில் !


பின் குறிப்பு:
இந்த கவிதையையும்(கவிதைன்னு சொல்லலாமா ?!?!), இதுக்கு முன்னாடி சொன்ன விஷயத்தையும் சேர்த்து தாங்கள் செய்யும் கற்பனைகளுக்கும் யூகங்களுக்கும் கம்பெனி நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது :)

கவிதைகள் ஜாக்கிரதை

நண்பனொருவன்:
"டேய்... ஏதோ கவிதை போட்டுருக்கேன்னு சொன்ன. ஆனா அந்த லிங்க்ல போயி பார்த்தா கதை மாதிரி எழுதி கடைசில ஆச்சர்யக்குறி வெச்சிருக்கிற?... ஓ... அதுதான் கவிதையா... ஏதோ சுமாரா இருக்குடா"

சங்கத்து ஆள் ஒருத்தன்:
"என்ன பாஸு.... எப்பவுமே ஒரே பீலிங்கா சோகமா எழுதிட்டு இருக்குற. உனக்கு கவிதைய விட அந்த இண்ட்ரோ குடுக்குற மொக்கைதான் நல்லா வருது பாஸு."

தோழியொருத்தி
:
"ஹே சிவா... வழக்கம் போல இந்த கவிதைக்கும் ஃபோட்டோ செம சூப்பர்!"
(இது பாராட்டு கிடையாது. உள்குத்து என்னனா... கவிதைங்கற ஒரு விஷயம் அங்க இல்லாத மாதிரி ஒரு பல்பு குடுக்கிறாங்க )

இதெல்லாம் நம்ம வலைபக்கத்து கவிதையை பார்த்துட்டு கோடானு கோடி(?!) ரசிகப் பெருமக்கள் கிட்ட இருந்து வர்ற ரெஸ்பான்ஸ்ல ஒரு சின்ன சாம்பிள்! ஆனா இதுக்காக நம்ம இலக்கிய சேவையை நிறுத்த முடியுமா?? அதனால.... "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் வேதாளத்தை நெருங்கி..." அப்படின்னு அம்புலிமாமா கதை மாதிரி, நானும் ஒரு வைராக்கியத்தோட நல்ல கவிதை எழுதியே தீருவேன்னு புயலென புறப்பட்டு..............................

என்னங்க இது??
நான்தான் கொசுவர்த்தியை சுத்த விட்டு ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்கை ஓட்டுறேன்... நீங்களும் 'உம்' கொட்டி வாசிச்சிட்டு இருக்குறீங்க. ஹையோ... ஹையோ !!!

உண்மையான காரணம் வேற ஒண்ணும் இல்ல...

இனிமேல் கொஞ்ச நாள் தனிமை, பிரிவுன்னு எழுதி இளையராஜா ட்ரூப் வயலின் மாதிரி பேக்ரவுண்ட்ல சோக கீதம் பாட வேண்டாம்னு நினைச்சேன். சில வலைபக்கங்களில் பார்த்தால் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை எழுதுறாய்ங்க. இவிய்ங்களை (ஸ்ரீமதி, ஒற்றை அன்றில்) பார்த்து இம்ப்ரெஸ் ஆகி இது மாதிரி நாமளும் ஒரு தடவை ரொமான்டிக் லுக்கு விடலாம்னு தோணுச்சு.

அலவலகத்தில் நிறைய ஆணி புடுங்குற வேலை இருந்தாலும், இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரணத்தோட எழுத ஆரம்பிச்சு, வந்து விழுந்த கவிதைகள் கீழே... படிச்சு பார்த்து ஏதாவது தேறுதான்னு சொல்லுங்க.

இனி.... கவிதைகள் ஜாக்கிரதை! ;)

--------------------------------------------------------------------------------------------------------------

அடிவான நட்சத்திரப் புள்ளிகளிணைத்து
எழுத்துக்களாக்கி உன் செல்லப் பெயர்கள்
ஒவ்வொன்றாய்ச் செய்வதுதான்,
இரவு நேர நீள் பயணங்களில்
எனக்கு னிச்சையாய்ப் போன வழக்கம்!
==========================



நீ விழிகள் விரியச் சினங்கொள்ளும் வேளையிலும்,
எனது செயல்கள் கலைத்து நிறுத்தி விட்டு
உதடு சுழித்துச் சிரிக்கையிலும்,
உன்னை இறுகக் கட்டி முத்தமிடும்
எண்ணம் துளிர்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை!
==========================

அலைபாயும் கூந்தலில் விரல்கள் செருகி
இடம் வலமென இரு சிறு கற்றைக் குழல்களெடுத்து
நடுவே பிணைத்துக் கடிவாளமிட்ட உன்
நளினம் கண்ட பொழுதில்,
தறிகெட்டு ஓடத் துவங்குகிறது என் மனம்.

==========================




என் அநேக வேண்டுதல்களை, நீ
மறுத்துப் புறந்தள்ளிச் சென்றாலும்,
உன்னை கோபிக்கத் தெரியாமல்
உன் விழியோர கர்வம் நினைத்து
ரசித்துச் சிரித்துக் கொள்கிறேன்... தனிமையில்.

==========================

நளினமான நடையுடன் சில கணங்களில்
அந்தச் சாலை வளைவைக் கடந்து சென்று விட்டாய்.
இன்னும் உனதழகான வளைவுகளில் சிக்கி
மீள வழியின்றி தவிக்கிறது என் மனம்!!




இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட