சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5




துயில் கலைந்த ஓர் இரயில் பயண பின்னிரவில்,

கதவருகில் நின்று மழைச் சாரல்
ரசித்து மனம் நனையலாம்.
கேள்விகள் கேட்டுத் தூங்கிப் போன
எதிர் இருக்கை சிறுமிக்காக
பதில்கள் தேடலாம்.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு கோப்பை
தேநீர்கிடைக்கத் தவமிருக்கலாம்.
உன் முதல் முத்தங்களை சாத்தியப்படுத்திய
என் ஏழாவது கவிதையை விட சிறந்த
ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்.

இந்த அகாலத்திலும் எங்கிருந்தோ
உன் முத்தங்களின் மகரந்தம்,
என் சுற்று வளியை ஆட்கொள்கிறது.
நான் கவிதைக்கான வார்த்தைகள்
கோர்க்கத் துவங்குகிறேன்.




சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 4






சாலை கடக்கையில் இறுகக்
கரம் பற்றிக் கொள்வாய்
சில நிமிடப் பேருந்து பயணத்திலும்
தோள் சாயத் தவறுவதில்லை
ஒன்றாய்த் தேநீர் அருந்திய
பின்பனிக் கால மாலை வேளைகள்

இவையனைத்தும் சேர்ந்து அல்ல -
வலியுணர்த்த ஒவ்வொன்றுமே அதனளவில்
முழுமையான காரணங்கள்.
என் வீட்டுத் தொட்டிச் செடி
இலைகள் உதிர்க்கத் துவங்கியாயிற்று...
நாளையேனும் வா!!!



சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 3




வழக்கமாய்க் கிடைக்கும் நெருக்கமும் ஸ்பரிசமும் இழந்து,
உதிர்ந்து கிடக்கும் உன் வீட்டு முற்றத்துக் கொடியின்,
அடர் மஞ்சள் நிறப் பூக்கள் மௌனமாய் அறிவிக்கின்றன...
சில நாட்களாய் உன் இருப்பை இழந்த வீட்டின் வெறுமையை!!!



.

சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 2

அழகாய் நீ சிரிக்க வெளித் தெரியும்
ஒற்றைத் தெற்றுப்பல்,
உன் சீரான பல்வரிசையோடு
அடுத்த சில நிமிடங்களுக்கான
என் இயல்பான செயல்களையும்
கலைத்து விடுகிறது.

சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 1


பள்ளி செல்லும் சிறுமி,
ஜோடி நாய்க் குட்டிகள்,
சிதறிய கொன்றை மலர்கள் - என
கார்த்திகை மாத மேகக் கூட்டம்
உருவங்கள் மாறி மாறிக் கடந்து செல்ல
உன்னழைப்பிற்குச் சிணுங்க ஆயத்தமாயிருந்த
அலைபேசியோடு காத்திருந்து,
பின் அதையே இறுகப் பற்றி
தூங்கிப் போகிறேன் ஏமாற்றத்துடன்...
மொட்டை மாடியிலேயே!




சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும்

தீபாவளிக்கு ஊருக்கு செல்லததால் சேர்ந்த பாவத்தை தொலைக்க, இரண்டு வாரஙளுக்கு முன்பு ஒரு சுப யோக தினத்தில் ஊருக்கு கிளம்பினேன்... நம்ம டேமேஜர்(அதாங்க மேனேஜர்) கிட்ட பொய் சொல்லி வாங்கின 2 நாள் லீவ் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து இந்த நாலு நாள் ட்ரிப் நல்ல ஒய்வாகவும் அழகாகவும் இருந்தது...

நிம்மதியா, முதல் ரெண்டு நாள் உணவு, ஓய்வு, மாலையில் நகர்வலம்(ஒரு புல்லையும் புடுங்காம நல்லா சாப்பிட்டு ஊர் சுத்துனதைத் தான் இப்படி டீசண்டா சொல்றோம் ) என கழிந்தது. "என்ன ஒரு வாழ்க்கை.. அற்புதம்யா"-ணு இன்னும் மனசு சொல்லிகிட்டே இருக்கு... ;)

அடுத்து நண்பனின் தங்கை திருமணம்... இதில ஒரு நாள் கழிந்தது.

வெயில் இல்லாமல், சில நேரங்களில் சாரலோடு பட்டய கிளப்பின வானிலை...
(இதே நேரத்தில் சென்னையை மழை புரட்டி எடுத்து கொன்டிருந்தது.. எஸ்கப்டா சாமீ)
ஒரு மாற்றமுமில்லாமலிருக்கும் ரத வீதிகள்...
மொட்டை மாடி காற்று...
திருமணத்தில் பாந்தமாய் சேலை உடுத்தி,அடிக்கடி அழகாய் சிரித்து கொண்டிருந்த ஒரு (பெயர் தெரியாத)பெண்.

எல்லாம் ஒரு கலவையா கலந்து கட்டி, நமக்குள்ள தூங்கிட்டிருந்த கவிஞனைத்(!) தட்டி எழுப்பிருச்சு... அப்புறம் எழுத ஆரம்பிச்சு, கடந்த ரெண்டு வாரமா, கவிதைங்ற பேர்ல எழுதி கிழிச்ச எல்லாத்தையும் இங்க ஏத்துறேன். பார்த்துட்டு சொல்லுங்க/திட்டுங்க/அடிங்க/ தப்பி தவறி ஏஎதாவது நல்லா இருந்தா வாழ்த்துங்கள். :)





சொற்களைத் தேடி




சரியான சொற்களைத் தேடி
அயர்ந்து வெறுமையாய் திரும்புகிறேன்.

மற்றுமொரு முறை உன் விழிகளை உற்று நோக்க,
எங்கோ முடிவிலியின் விளிம்பில் முளைத்த
செடியின் மலர்கள் உதிர்வதைப் போல
எனக்கான சொற்களை
உன் விழிகள் உதிர்க்க துவங்குகின்றன!

இயன்றவரை எல்லவற்றையும் சேகரித்துக் கொண்டு
சிறுவனுக்குரிய மகிழ்ச்சியுடன்
தொடுவானம் நோக்கி விரைகிறேன்...
முற்றுப் பெறக் காத்திருக்கும் என் கவிதைகளை நிரப்ப!

பிரிவின் எதிர்பார்ப்புகளுடன்.....


அடுத்த முறை வீசும் காற்றுக்கு,
வீழ்ந்து விடும் சாத்தியமுள்ள
பாதி முறிந்த கிளையொன்றின் மீது கவனம் குவித்து
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.

கூடிக் களித்த கணங்கள் - கோடி
எனினும்,
ஒவ்வாத தருணங்களின் நினைவுகள்
அடிநாக்கில் செறிவான கசப்புச் சுவையை
படர விட்டுக் கொண்டிருக்கிறது தற்சமயம்.

இதுதான் இறுதியான பிரிவாக வேன்டுமென,
என் தரப்பின் எல்லா அபத்த வாதங்களையும் கொண்டு
மனதிற்குள் ஓர் ஒத்திகை
நிகழ்த்தி முடித்தாகி விட்டது.

உன் அருகாமையின் அருமை உணரா
என் உலக போலி நியாயங்கள், சுயநலம்
வஞ்சம், கோபம், கயமை எல்லாம்
வெகு விரைவில் வறண்டு அழியக்கூடும்.
அதற்காகவாவது பிரிந்து போ... இன்றேனும்.

தேவையோ கவனமோ இல்லாவிடினும்...




உச்சி வெயில் தவிர
பிற நேரங்களில்
யாருக்கும் தேவையோ கவனமோ இல்லாவிடினும்
கிழக்கேயும் மேற்கேயும் படிந்து
தேய்ந்து வளர்கிறது நாள்தோறும்...
மரத்தின் நிழல் !

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட