கவிதைகள் ஜாக்கிரதை

நண்பனொருவன்:
"டேய்... ஏதோ கவிதை போட்டுருக்கேன்னு சொன்ன. ஆனா அந்த லிங்க்ல போயி பார்த்தா கதை மாதிரி எழுதி கடைசில ஆச்சர்யக்குறி வெச்சிருக்கிற?... ஓ... அதுதான் கவிதையா... ஏதோ சுமாரா இருக்குடா"

சங்கத்து ஆள் ஒருத்தன்:
"என்ன பாஸு.... எப்பவுமே ஒரே பீலிங்கா சோகமா எழுதிட்டு இருக்குற. உனக்கு கவிதைய விட அந்த இண்ட்ரோ குடுக்குற மொக்கைதான் நல்லா வருது பாஸு."

தோழியொருத்தி
:
"ஹே சிவா... வழக்கம் போல இந்த கவிதைக்கும் ஃபோட்டோ செம சூப்பர்!"
(இது பாராட்டு கிடையாது. உள்குத்து என்னனா... கவிதைங்கற ஒரு விஷயம் அங்க இல்லாத மாதிரி ஒரு பல்பு குடுக்கிறாங்க )

இதெல்லாம் நம்ம வலைபக்கத்து கவிதையை பார்த்துட்டு கோடானு கோடி(?!) ரசிகப் பெருமக்கள் கிட்ட இருந்து வர்ற ரெஸ்பான்ஸ்ல ஒரு சின்ன சாம்பிள்! ஆனா இதுக்காக நம்ம இலக்கிய சேவையை நிறுத்த முடியுமா?? அதனால.... "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் வேதாளத்தை நெருங்கி..." அப்படின்னு அம்புலிமாமா கதை மாதிரி, நானும் ஒரு வைராக்கியத்தோட நல்ல கவிதை எழுதியே தீருவேன்னு புயலென புறப்பட்டு..............................

என்னங்க இது??
நான்தான் கொசுவர்த்தியை சுத்த விட்டு ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்கை ஓட்டுறேன்... நீங்களும் 'உம்' கொட்டி வாசிச்சிட்டு இருக்குறீங்க. ஹையோ... ஹையோ !!!

உண்மையான காரணம் வேற ஒண்ணும் இல்ல...

இனிமேல் கொஞ்ச நாள் தனிமை, பிரிவுன்னு எழுதி இளையராஜா ட்ரூப் வயலின் மாதிரி பேக்ரவுண்ட்ல சோக கீதம் பாட வேண்டாம்னு நினைச்சேன். சில வலைபக்கங்களில் பார்த்தால் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதை எழுதுறாய்ங்க. இவிய்ங்களை (ஸ்ரீமதி, ஒற்றை அன்றில்) பார்த்து இம்ப்ரெஸ் ஆகி இது மாதிரி நாமளும் ஒரு தடவை ரொமான்டிக் லுக்கு விடலாம்னு தோணுச்சு.

அலவலகத்தில் நிறைய ஆணி புடுங்குற வேலை இருந்தாலும், இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரணத்தோட எழுத ஆரம்பிச்சு, வந்து விழுந்த கவிதைகள் கீழே... படிச்சு பார்த்து ஏதாவது தேறுதான்னு சொல்லுங்க.

இனி.... கவிதைகள் ஜாக்கிரதை! ;)

--------------------------------------------------------------------------------------------------------------

அடிவான நட்சத்திரப் புள்ளிகளிணைத்து
எழுத்துக்களாக்கி உன் செல்லப் பெயர்கள்
ஒவ்வொன்றாய்ச் செய்வதுதான்,
இரவு நேர நீள் பயணங்களில்
எனக்கு னிச்சையாய்ப் போன வழக்கம்!
==========================



நீ விழிகள் விரியச் சினங்கொள்ளும் வேளையிலும்,
எனது செயல்கள் கலைத்து நிறுத்தி விட்டு
உதடு சுழித்துச் சிரிக்கையிலும்,
உன்னை இறுகக் கட்டி முத்தமிடும்
எண்ணம் துளிர்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை!
==========================

அலைபாயும் கூந்தலில் விரல்கள் செருகி
இடம் வலமென இரு சிறு கற்றைக் குழல்களெடுத்து
நடுவே பிணைத்துக் கடிவாளமிட்ட உன்
நளினம் கண்ட பொழுதில்,
தறிகெட்டு ஓடத் துவங்குகிறது என் மனம்.

==========================




என் அநேக வேண்டுதல்களை, நீ
மறுத்துப் புறந்தள்ளிச் சென்றாலும்,
உன்னை கோபிக்கத் தெரியாமல்
உன் விழியோர கர்வம் நினைத்து
ரசித்துச் சிரித்துக் கொள்கிறேன்... தனிமையில்.

==========================

நளினமான நடையுடன் சில கணங்களில்
அந்தச் சாலை வளைவைக் கடந்து சென்று விட்டாய்.
இன்னும் உனதழகான வளைவுகளில் சிக்கி
மீள வழியின்றி தவிக்கிறது என் மனம்!!




இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட