அழுக்கு ஜீன்சும், சென்னை புத்தகக் கண்காட்சியும்

கடமை தவறாத என் அறைத் தோழர்கள் இருவரும் நேற்று (ஜன-17, சனி) அலுவலகம் சென்று விட்டதால், புத்தகக் கண்காட்சிக்கு 'தனியாய் சென்று அல்லல்படுவாயாக' என சபிக்கப்பட்டேன்.
சென்ற வாரம்(சனி/ஞாயிறு) செல்ல முடியாத அளவுக்கு ஐ யாம் வெரி பிசி. இந்த வாரம் நண்பர்களை கூப்பிட்டால் என்னை விட "பிசி எபக்ட்" குடுத்து அலுவலகம் சென்று விட்டார்கள்(அவிய்ங்க ஏற்கனவே போயிட்டு வந்துட்டாய்ங்க... அதான் முக்கிய காரணம்).

அதிகாலை 11.00 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து விட்டு, சனி நீராடி, உடை உடுத்தி, 'சரவணா' வில் உண்டு முடித்து, இரண்டு பேருந்துகள் மாறி, சிக்னல் மதிக்காமல் சாலை கடந்து பு.க வளாகத்தை அடைய மணி 2.30 .


இந்த வருடம் பெரிதாய் குறைபட்டுக்கொள்ள ஒரு காரணமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல ஏற்பாடு. தாகத்திற்கு தண்ணீர், சந்தேகம் தீர்க்க 'enquiery counter' மற்றும் ஸ்டால் எண்களுடன் வளாக வரைபடம் , அவ்வப்போது ஒலிபெருக்கி அறிவிப்புகள், உலக சினிமா காட்ட ஒரு திரை என பு.கா ஒவ்வொரு வருடமும் மெருகேறுகிறது.

உள் நுழைந்ததும் வலது கோடியிலுள்ள 'கீழைக் காற்று' ஸ்டாலில் துவங்கினேன். பின் சமையல், கோல, ஆன்மிக, சுய முன்னேற்ற, ஆங்கில புத்தகங்கள் விற்கும் கடைகளைக் கவனமாய்த் தவிர்த்து பிடித்த ஸ்டால்கள் ஒவ்வொன்றாய் அலசினேன்.
ஆழி, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, தமிழினி மற்றும் இன்ன பிற என சுற்றித் திரிந்தேன்.

காலச்சுவடு - மிக அருமையான அரங்க அமைப்பு. நல்ல நூல்களும் கூட...

தமிழினி - எழுத்தாளர்களின் கம்பீரமான பெரிய படங்களை தொங்க விட்டு, நல்ல நல்ல புத்தகங்கள் வைத்திருந்தார்கள். தினத்தந்தி சினிமா செய்திகளை பரம்பரை பரம்பரையாய் படிப்பவர்களும், மானாட மயிலாடுவதை குடும்பத்துடன் கண்டு களிக்கும் மேன்மக்களும், நமீதாவுக்கு கோயில் கட்டும் முரட்டு பக்தர்களும் நிறைந்த தமிழ் கூறும் நல்லுலகின் ரசனை, இப்படி எழுத்தாளர்களை விளம்பரம் செய்து வாசகர்கள் கவரப்படும் அளவிற்கு மாறி விட்டதோ என ஒரு ஆச்சர்யம் ஏற்பட்டது. (இந்த ஸ்டாலில் இருந்த எழுத்தாளர் நாஞ்சில்நாடனிடம் ஒரு புத்தகத்தில் ஆட்டோகிராப் வாங்கிட்டோம்ல...)

உயிர்மை - மொத்தம் நான்கைந்து பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களே 85% ஆக்கிரமித்திருந்தன. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ரசிகர்கள் தன்னை 'உயிர்மை'யில் சந்திக்கலாம் என வலை மனையில் கூறியிருந்தார். அங்கு சென்று உயிர்மை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டால் 'சொல்லியிருந்தார்...வரணும்.. இன்னும் ஆளை காணோம்' என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

கிழக்கு - பிடித்த பதிப்பகம். நல்ல கூட்டம். உங்கள் செல்பேசி எண்ணை எழுதி அங்கேயுள்ள பெட்டியில் போட்டால் புது புத்தகம் வெளியிட்டால் குறுஞ்செய்தி அனுப்புவதாக சொன்னார்கள். காசா... பணமா.... என் எண்ணை எழுதி கடாசியாகி விட்டது. சென்ற வருடம் இங்கு சந்தித்த எழுத்தளர் பா.ராகவன் சிறிய விபத்தில் சிக்கி இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பதாகத் தன் வலை மனையில் கூறியிருந்தார். விரைவில் நலம் பெறுவார் என வேண்டி கொள்வோம்.

ஆனந்த விகடன் - செம கூட்டம். பட்டய கிளப்புறாய்ங்க...

ரேடியோ மிர்ச்சி ஸ்டாலில் கேள்விகளுக்கு பதில் சொன்னால் பரிசு என்றார்கள். கிரிக்கெட் பிட்ச் இரு கோடியிலும் இருக்கும் ஸ்டம்ப்களுக்கிடையேயான தூரம் என்ன என்ற முதல் கேள்விக்கு '26' மீட்டர் என சரியாக ஒரு கேவலமான பதிலை சொல்லி 'பல்ப்' வாங்கினேன்.

மிக சிறியது, சிறியது மற்றும் பெரியதுமாக சுமார் 25+ புத்தகங்கள் வாங்கியாகி விட்டன. மாலையில் அலுவலகம் முடித்து என்னை சந்திக்க பு.க வந்த அறைத்தோழன் ராஜாவின் வன்மையான கண்டனத்திற்குட்பட்டு, "கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ" என நானே திகிலாகி, மீண்டும் ஒரு முறை தமிழினி-க்குச் சென்று அ.முத்துலிங்கத்தின் கட்டுரை தொகுப்பு ஒன்றுடன் எனது அலப்பறையை 8 மணிக்கு முடித்து கொண்டு வீடு திரும்பினோம்.

திரும்பும் போது தான் யோசித்தேன், முழுமையாய் 5 மணி நேரம் சுற்றியும் எந்த ஒரு தொந்தரவும் என் கவனத்தை கலைக்கவில்லை( ஒலி பெருக்கி சத்தம், பசி... அட இவ்வளவு ஏங்க... எங்கெங்கு காணினும் நிறைந்து இருந்த பெண்கள் உட்பட). கர்ம சிரத்தையாய் ஒரு காரியம் முடித்ததாய் ஒரு நிறைவு.
"நீ அம்புட்டு நல்லவனாடா" -ன்னு நீங்க கொலை வெறில கேக்குறது என் காதில விழுகுது... நான் அந்த அளவுக்கு நல்லவன் இல்லேனாலும்... வடிவேலு சொல்றது மாதிரி "லைட்ட்ட்ட்ட்டா...!!!" :)

பின் குறிப்பு:
தலைப்புல இருக்கிற "அழுக்கு ஜீன்ஸ்" உள்ள வரலையேன்னு யோசிக்கிறீங்களா??? அது சும்மா ஒரு மொக்கை பில்ட்-அப்பு... ப்ரீயா விடுங்க!!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட