எண்ணங்கள்...மீண்டும்!

மூடப்பட்ட கதவுகளின் உள்ளிருக்கும்
இரகசியத்தைப் போல,
உன் மெளனத்திற்கான காரணத்தை
என்னால் அனுமானிக்க முடியவில்லை.


எந்த மொழியிலிருந்தேனும் வார்த்தைகள்
கோர்த்து காரணத்தை சொல்லி விடு...
உன் மெளனம் தாங்காமல் நான்
தாய்மொழி மறந்து பேதலிக்கும் முன்!


==============================================ஒரே குடைக்குள் நின்ற நெருக்கத்தால்
உன் சுவாசத்தின் வெப்பம் பட்டு,
அந்தப் பெருமழையிலும்
என் இதயம் ஈரமற்று உலர்ந்து விட்டது!

உன்னால் முடியுமளவிற்கு முத்தங்களிட்டு
ஈரப்படுத்தி விட்டுப் போ - என
ஓசையில்லா ஒரு மொழியில்
நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா?

துரத்தும் உன் நினைவுகள்

ரசனைகள் மாறும் கால ஓட்டத்தின்
ஒரு திருப்பத்தில் உனைப் பார்த்து
பயந்து நின்றிருந்தேன்...
எனக்கு உன்னைப் பிடித்துத் தொலைந்து விடுமோ என்றெண்ணி!

இப்போது நீ நீங்கிப் போய் விடினும், உன் நினைவுகள்
அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சலைப் போல்
மனதின் ஒரமாய் இரைந்து கொண்டிருக்கிறது.

மறக்க நினைத்தாலும் உன் நினைவுகளை கிளறி விடச்
சின்னச் சின்ன விஷயங்கள் போதுமானதாய் இருக்கின்றன...
உனைப் போல் கூந்தல் வாசத்துடன் கடந்து செல்லும் பெண்கள்,
பெளர்ணமி ஒளியில் நாம் வாசித்த பாரதியார் கவிதைகள்,
சில சமயம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவு கூட!!!

உன் நினைவுகளைக் கரைக்க எத்தனித்து,
ஒரு மழை பெய்யும் பின்னிரவில்
சாலையில் இறங்கி நடக்கிறேன்.

முயற்சியில் தோல்வியுற்று, யாருமற்ற ஒரு
பெருவெளியில் ஓடி மறைகிறேன்...
முன்பை விட அடர்ந்து போன உன் நினைவுகளுடன்!

எண்ணங்கள்

நானும் நீயும் இடைவெளியுடன்
நடையைத் தொடர,
நாம் அருந்தி வைத்த தேநீர்க் கோப்பைகள் ஏனோ,
உரசியபடியே நிற்கின்றன...இன்னும்!!!

================================================

என்னை வழியனுப்புகையில்
உன் கண்ணீர்த் துளிகளுக்குப் பிறகு கிடைக்கும்
அழுத்தமான இரு முத்தங்களுக்காகவே
அடிக்கடி ஊருக்குப் போகத் தோன்றுகிறது!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட