நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 3rd AC டிக்கெட்டும் ஐம்பது ரூபாய் கைப்பணமும்

இதே மாதிரி கொஞ்சம் இடைவெளி கூட இல்லாம, எப்பவுமே ஆணி புடுங்கிட்டு இருந்தா, அடுத்த பிறவி முழுவதும் புதுகை புயல் J.K. ரித்தீஷ் நடித்த படங்களை மட்டுமே கண்டு இன்புறுவாய் என, கனவில் ஒரு துர் தேவதை சபித்ததையடுத்து, பதறிப்போய் ஊருக்கு கிளம்ப தீர்மானித்தேன்.

IRCTCல் துலாவியபோது தற்செயலாக சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் AC டிக்கெட் வெறும் 382 ரூபாய் மட்டுமே என கண்டு இன்ப அதிர்ச்சி. சாதாரண ஸ்லீப்பர் வக்குப்பு டிக்கெட்டை விட ரூ.100 மட்டுமே அதிகம் கொடுத்து 3rd AC எடுத்து விட்ட, எனது ராஜதந்திரத்தை கண்டு எனக்கே வியப்பு தாங்க முடியவில்லை.

பயண நாளன்று மாலை. அலுவலக நண்பர் 'நான் உன்னை கிண்டில இறக்கி விடுறேன்யா' என சொல்ல, கிண்டியிலிருந்து 20 நிமிடத்தில் எக்மோரை அடையலாம் என மனக்கணக்கு போட்டு தெனாவெட்டாக தாமதமாக 7.20 க்கு கிளம்பினேன் . 8.25-க்கு நம்ம ட்ரெய்ன். ஒரு மணி நேரத்தில் O.M.R ரோட்டிலிருந்து எக்மோர் போகணும்!! அதுவும் பரபரப்பான மாலை நேர போக்குவரத்து நெரிசலில்.

நன்பருடன் பைக்கில் கிளம்பியதும் சிறு தூரல். "செம ரொமான்டிக் ஒபனிங்கா இருக்கே!"னு நினைச்சு மூனு நிமிஷத்துல, டைடல் பார்க் சிக்னலில் செம ட்ராபிக். தூரல் மழையாக மாறி புரட்ட ஆரம்பிச்சிருச்சு.

"என்னயா... இப்படி பெய்யுது?!?!"

"சரி ராம்... கிண்டி வரைக்கும் போக வேண்டாம். மத்திய கைலாஷ் - கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன்ல என்னை இறக்கி விட்டுட்டு, நீங்க ஒரங்கட்டிட்டு நனையாம இருங்க. நான் அங்கேயிருந்து எக்மோர் போயிடறேன் "

கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன். மணி 7.35
இந்த ரூட் கிண்டி மாதிரி கிடையாது. எக்மோர் போகனும்னா ரெண்டு ட்ரெய்ன் மாறணும். 7.45 MRTS ட்ரெய்ன் இன்னும், 7,50 ஆகியும் வரலை.

'இவிய்ங்க ஏன் இப்படி ரூட் வெச்சிருக்காய்ங்க... எக்மோரையும் பறக்கும் ரயில் ரூட்ல கொண்டு வந்திருக்கலாம்... முட்டா பசங்க'
'சரியான நேரத்துக்கு வரவே மாட்டாய்ங்க... லூ#$% *&^@$'
'பேசமா வெளில போய் ஆட்டோ பிடிக்கலாமா?!?! இந்த மழைல ஏதாவது மொக்கை ட்ராபிக்ல மாட்டிடோம்னா?? ட்ரெய்ன்லயெ போவோம் '

இப்படி திட்டிட்டே இருக்க, 7.58-க்கு சாவகாசமா வருது.
'இன்னும் 25 நிமிஷத்துல எக்மோரா? ஆவுறதில்லை'னு நினைச்சிட்டு உள்ள ஏறிட்டேன். பேருதான் பறக்கும் ரயில். நம்ம ஊருக்குள்ள ஒடுற மினி பஸ் மாதிரி 30 கி.மீ வேகத்துலதான் போறாய்ங்க.
நாலு ஸ்டேஷன் தான்டிண பிறகு மழையே இல்ல.

'எக்மோருக்கு ரெண்டாவது ட்ரெய்ன் பிடிக்கிறதுக்கு பதிலா, பார்க் ஸ்டேஷன்ல இறங்கி ஆட்டோ பிடிக்கலாம்.'
'இல்ல..இல்ல.. பார்க்குக்கு முன்னாடி சிந்தாதிரிபேட்டைலயே இறங்கினா தூரமும், நேரமும் குறையும்'


சிந்தாதிரிபேட்டை. மணி 8.18.
'இன்னும் ஏழு நிமிஷம் தான் இருக்கு. ஓட்டத்தை ஆரம்பிடா கைப்புள்ள'.
ஆது ஒரு ஈயாடுற ஸ்டேஷன். அங்கேயும் விஜயகாந்த் பட போலீஸ் சேஸிங் சீன் மாதிரி நான் ஓட, அங்க இறங்குன நாலு பேரும் என்னை ஒரு மாதிரியா பார்த்தாய்ங்க.

வெளில வந்து பார்த்தா ஒரே ஒரு ஆட்டோ. காது குடைஞ்சிட்டு இருந்த ஆட்டோக்காரரை எக்மோர்னு சொல்லி கிளப்பியாச்சு.

எக்மோர் வந்ததும் 30 ரூபாயை அவர் கையில் திணித்து விட்டு, மெதுவாக சென்ற ஆட்டோவிலிருந்து ரன்னிங்ல இறங்கும் போது 8.25.
"இன்னிக்கு ஆப்புதாண்டா"னு சொல்லிட்டே எந்த பிளாட்பார்ம்னு பார்க்க போனா, அந்த போர்டுல நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பேரே இல்ல. விசாரணை கவுண்டர்-ல கேக்கலாம்னு பார்த்தா ஏறகெனவே ஆறேழு பேர் சுத்தி நிக்கிறாய்ங்க.
'சரி... உள்ள போயி யார்ட்டயாவது கேக்கலாம்'

நுழைந்ததும் முதலில் இருக்கும் பிளாட்பார்ம்ல வரிசையா இருக்குற LED display ல வண்டி எண் 0607. 'எங்கேயொ பார்த்த நம்பர் மாதிரி இருக்கெ ?!?!'
பக்கத்துல இருக்குற ட்ரெய்ன் கோச்ல போர்டு 0607 சென்னை <<==>> நாகர்கோவில்.
'சூப்பர் அப்பு..'... அப்போ நம்ம நாலாவது கோச் எங்க?!?!. உத்து பார்த்தால் அட அதுவும் இது தான். உள்ள ஏறின உடனே வெளிய திரும்பி பார்த்தால் வண்டி நகர ஆரம்பிச்சிருச்சு. மணி 8.26!!!


ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாட!!!


பந்தாவா உள்ள போறேன். அந்த கோச்ல கடைசி சீட் எனக்கு!. பார்த்ததும் செம கடுப்பு. ஒவ்வொரு compartment லயும் பக்கத்துக்கு மூணு அப்படின்னு ஆறு சீட் இருக்கும் ஆனா இதுல ஒரு பக்கம் இருக்குற மூணு சீட்டோட அந்த கோச் முடிஞ்சு போச்சு. அதாவது சாதரண compartment ல நடுவுல ஒரு தடுப்பு வெச்சா எப்டி இருக்கும்? செம இடைஞ்சல். ஜெயில்ல இருக்குற பீலிங்.

போர்வை தலையணை எல்லாம் தருவாய்ங்கனு பார்த்தா, 25 ரூபா தரணுமாம். சட்டை பையை துலாவினதும்தான் தெரிஞ்சது நம்ம கிட்ட மொத்தம் இருக்கிறதே 50 ரூபா. கிளம்பின அவசரத்தில ATM ல எடுக்க மறந்துட்டேன். இதுல நான் சாப்பாடு + தண்ணி பாட்டில் + போர்வை தலையணை வாங்கணும். முதல் ரெண்டு வாங்கி முடிச்சதும் மிச்சம் இருந்தது ஏழு மதிப்புள்ள இந்திய ரூபாய்கள் .
சரி... கைய முட்டு குடுத்து முரட்டு தனமா தூங்குவோம்னு மனசை தேத்தியாச்சு.

அப்பப்போ பக்கத்துல இருந்த ஒரு ஆன்ட்டி & பக்கத்துல இருந்த இன்னொருத்தர் கிட்ட பேசிட்டு வந்தேன். நடு சாமத்துல குளிர் தாங்க முடியாம வெளிய போயி நின்னுட்டு இருக்கும் போது நம்ம வயசுல ஒரு இளைஞர் பேச்சு துணைக்கு கிடைச்சார். அவர் ரயில் என்ஜின் துணை டிரைவராம். அவரும் மதுரைக்கு பயணித்து கொண்டிருந்தார். பல சுவாரசியமான விஷயங்களை சொன்னார்.

## இருக்கிறவய்ங்கள்ள பாதி பேரு(எல்லாரும் நம்ம தமிழ் மக்கள் தான் ) இங்கிலீஷ் பேசி டார்ச்சர் பண்றாய்ங்க. எப்படித்தான் இந்த ஒரு மனநிலை வருதுன்னு தெரியல. போலியான மேட்டுக்குடித்தனம்!!! "இவிய்ங்களையெல்லாம் ..........................." னு ஒரு உன்னதமான தண்டனைய மனசுல நினைச்சுகிட்டேன்
"இவிய்ங்க
(நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்) எப்பவுமே லேட்டாதான் போவாய்ங்க தம்பீ." என்று மதுரை தமிழில் பேசிய நபர் மட்டுமே ஆறுதல்.

## டெல்லியில் வசிக்கும் ஒரு அரசு அதிகாரியின் தமிழ் குடும்பம், சொந்த ஊரான நெல்லைக்கு செல்கிறது. அவருடைய மனைவியும், மகளும் வட இந்தியா/ டெல்லி பெருமைகளை சக பயணிகளிடம் வாய் வலிக்காமல் மொக்கை போட்டு கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் தமிழ். ஆனால் இவர்கள் பேசியதில் 70% ஆங்கிலம், 20% ஹிந்தி , 10% தமிழ். வட இந்திய நவராத்திரி கொண்டாட்டக்களில் துவங்கி பஞ்சாபி தாபா அடுப்பு எப்படி செய்கிறார்கள் வரை அவிய்ங்க அலப்பறை தாங்கல.

## ரயில் என்ஜின் துணை டிரைவருடன் பேசியதிலிருந்து,

# தற்போது சென்னை-விழுப்புரம் & மதுரை-திண்டுக்கல் மட்டுமே இருவழிப்பாதை. சென்னை - மதுரை முழுதும் இரு வழி ரயில் பாதை மற்றும் Electrification ஆகி விட்டால் ஆறு மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு போகலாம். சுமார் ஒன்றரை வருடத்தில் இப்பணி முடியலாம்.

# தற்போது கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் செயல்பட ஆரம்பித்ததும், அது ரயில்வேயின் கீழ் வராது. அது தனி சுய அமைப்பு .

# வயதான ரயில்வே ஊழியர்கள் பெரும்பாலானோர் மிகவும் பொறுப்பில்லாத மனநிலையுடன்தான் நடந்து கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் இளையவர்கள் பரவாயில்லை.

# இந்திய ரயில்வே துறை பயணிகள் போக்குவரத்தை ஒரு சேவையாகத்தான் செய்கிறது. அவர்களின் லாபம் சரக்கு போக்குவரத்தில்தான் அதிகம்.


சிறப்பு ரயில் என்பதால், நின்னு நின்னு இரண்டு மணி நேர தாமதமாக மதுரை வந்து சேர்ந்தது. அங்கிருந்து ஊருக்கு போகும் பஸ்சும் மெதுவாகவே சென்றது. (நம்மளை சுத்தி சதி பண்றாய்ங்களோ!?!?)

வழக்கமா ஊருக்கு போக11 மணி நேரமாகும். எல்லா டிரைவர்களின் புண்ணியத்திலும் வீடு வந்து சேர 14 மணி நேரம் ஆச்சு!!

மதுரைகாரர் சொன்ன "இவிய்ங்க எப்பவுமே லேட்டாதான் போவாய்ங்க தம்பீ."... ஊருக்கு போன பிறகும் கேட்டுட்டே இருந்தது!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட