அற்புதமான ஒரு திரைப்படம் - "Spring, Summer, Fall, Winter... and Spring"

முடிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் 2009-ஆம் வருடம், அதற்கு முந்தைய சில வருடங்களைப் போல இல்லாமல், பல திருப்பங்களும் நிகழ்வுகளும் (எனக்கு தனிப்பட்ட முறையில்) கொண்டிருந்தது. இவ்வருடத்தில் எந்தவொரு முன் திட்டங்களுமின்றி இயல்பாய் வந்த ஒரு பழக்கம், 'நல்ல படங்கள் (அ) உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது'.சில ஆண்டுகளுக்கு முன், ஆனந்த விகடனில் செழியன் எழுதிய 'உலக சினிமா' தொடர்தான் எனக்கான முதல் அறிமுகம். பின் இணையமும், தமிழ் வலைப்பூக்களும்.'உலக சினிமா' தொடர் வாசிக்கும் பொழுது அப்படங்களை பார்க்க ஆரம்பிக்காவிட்டாலும் இவ்வருடம் எல்லாம் ஒன்றாய் அமைந்து வந்ததில் பார்க்கத் துவங்கி விட்டேன்.

"டேய்.. நீ மத்தவங்களுக்குதாண்டா மாஸ்... எனக்கு வெறும் தூசு...தூசு!" போன்ற சிரிப்பூட்டும் பஞ்ச் டயலாக்குகள் கொண்ட அதீத மொக்கை மசாலா படங்களும், மோசமான திரையரங்குகளும் (பெரும்பாலான சமயங்களில் இவிய்ங்களே 80/100 ரூபாய்க்கு பிளாக்ல டிக்கெட் விப்பாய்ங்க...சிறந்த உதாரணம்: கே.கே நகர் உதயம் )ஏற்படுத்துகிற சலிப்புணர்வு நிரம்பிய எந்த ஒரு ஜீவராசிக்கும் உள்ள மிகச் சிறந்த மாற்று வழி 'உலக சினிமா'. சமீப காலங்களில் நல்ல தமிழ் படங்கள் வருகிற ஆரோக்கிய சூழலையும் மறுக்க முடியாது, எனினும் அது மிக மிகக் குறைந்த சதவீதமே.

இவ்வருடத்தில் பார்த்த மிக சிறந்த ஒரு படத்தை பற்றிய என் பார்வை கீழே.

Spring, Summer, Fall, Winter... and Spring

"சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்

சிறுகச் சிறுக விடுத்து
ச் செல்வது
சாம்பலை மட்டுமே!
"

என்றொரு ஜப்பானிய ஜென் கவிதை உண்டு.(யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்தது). மனிதன் தன் வாழ்வில் அன்பு,எதன் மீதும் பற்று இல்லாமல் வாழ முடியுமா? அப்படி வாழ்வதுதான் துன்பமின்றி இருப்பதற்கான வழி என்ற புத்த மத கோட்பாட்டை மிக அற்புதமான முறையில் விவரிக்கிறது இந்த கொரிய மொழி படம். மனித வாழ்வை நான்கு படி நிலைகளாக பிரித்து, அவற்றை கால நிலை சுழற்சியிலுள்ள நான்கு பருவங்களுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் உக்தியில், இந்த படம் மிக சிறந்த திரை அனுபவத்தை தருகிறது. படத்தின் மொத்த வசனங்களையும் ஒரு வெள்ளை காகிததில் ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். இயக்கியவர் - மிக புகழ் பெற்ற கொரிய இயக்குனர் கிம் கி டுக். (Kim ki Duk). அசாத்தியமான அழகியல் உணர்வுடன் கூடிய இப்படத்தின் ஒளிப்பதிவை போன்று இது வரை நான் எந்த படத்திலும் கண்டதில்லை. ஒளிப்பதிவு : Dong-hyeon Baek
வசந்த காலம்:
இரு பசுமையான மலைகளுக்கிடையே அமைதியான ஓர் ஏரி.அந்த ஏரியின் நடுவில் மரத்தாலான சிறிய அழகிய மிதக்கும் வீடு (அ) ஆசிரமம். அங்கிருக்கும் வயதான புத்த துறவியும், ஒரு சிறுவனும் காலையில் எழுந்து படகில் கரைக்குச் சென்று மருந்திற்கான மூலிகைகளை பறித்து விட்டுத் திரும்புகின்றனர். மறுநாள் சிறுவன் பொழுதைக் கழிக்க கரைக்கு தனியே வந்து சுற்றியலைகிறான். அங்கிருக்கும் ஒரு குட்டையில் தான் பிடித்த ஒரு மீன், ஒரு தவளை மற்றுமொரு பாம்பு என ஒவ்வொன்றின் உடலிலும் நூலால் கல்லை கட்டி விடுகிறான். இவை துன்பபடுவதை கணடு சிறுவன் சிரிக்க, இதை மறைந்திருந்து துறவி கவனிக்கிறார். இரவு சிறுவன் தூங்கும் போது அவன் முதுகில் துறவி ஒரு பெரிய கல்லை கட்டுகிறார். காலையில் எழும் சிறுவன் துறவியிடம் கல்லை எடுத்து விடுமாறு கெஞ்சுகிறான். "முதலில், உன்னை போன்று சிரமபடும் அந்த உயிரினங்களை விடுவி. ஆனால் எதவாது ஒன்று இறந்திருந்தாலும் அந்த சுமை வாழ்நாள் முழுதும் உன் மனதில் இருந்து நீங்காது" என்கிறார். தவறை உணர்ந்த சிறுவன் மீன்டும் குட்டைக்கு வந்து தேடி தவளையை விடுவிக்கிறான். மீனும், பாம்பும் இறந்து கிடப்பதை கண்டு வருந்தி அழுகிறான். இதையும் துறவி மறைந்திருந்து பார்த்து கொண்டிருக்கிறார்.

கோடைக்காலம்:
சிறுவன் இப்போது இளைஞன் (அ) இளம்துறவி ஆகியிருக்கிறான். ஒரு பெண்மனி தனது இள வயது மகளுடன், மூத்த துறவியை சந்திக்க வருகிறாள். தனது மகள் சிறிது உடல் நலம் குன்றியுள்ளதால், அவளை சிகிச்சைக்காக அங்கேயே விட்டு செல்கிறாள். மறுநாள், இளம்பெண் தனியே மழையில் நனைந்து கொண்டு வெளியில் அமர்ந்திருப்பதை கண்ட இளைஞன் ஒரு கூடையை எடுத்து, அவள் தலைக்கு மேல் குடை போல் பிடிக்க, அவள் புன்னகைக்கிறாள். பின்பொரு நாள் அவள் உடை மாற்றுகையில், எதேச்சையாய் பார்க்க நேர்ந்த இளம்துறவியின் எண்ணம் அலைபாயத் தொடங்குகிறது.மறுநாள் இளைஞன் படகில் கரைக்கு செல்லும் போது 'நீயும் வருகிறாயா?' என கேட்க அவள் மௌனமாக படகில் ஏறி அமரவும், கரைக்கு செல்கின்றனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி ஒரு சிற்றருவியின் அருகே ஓரிடத்தில் அவளை புணர்கிறான். அவர்களுக்குள் ஈர்ப்பு அதிகமாகிறது. பின்பொரு நாள், துறவி தூங்கி கொண்டிருக்க, இளைஞனும் யுவதியும் விடிவதற்கு முன்பே படகிலேறி ஏரியை சுற்றுகின்றனர். பின் படகிலேயே இருவரும் புணர்ந்து களைத்து உறங்குகின்றனர்.காலையில் இதை கண்ட துறவியிடம், இளைஞன் மன்னிப்பு கேட்கிறான். 'இது இயற்கைதான்' என்கிறார். துறவி பின்பு அந்த பெண்ணிடம் திரும்பி, 'இன்னும் உனக்கு உடல் நலமின்றி இருக்கிறதா?' என கேட்க, அவள் 'இல்லை' என்கிறாள். 'நீ கிளம்பலாம்' என்கிறார். பெண் கிளம்ப இளைஞன் அதை தடுக்க முடியாமல் தவிக்கிறான். அவள் சென்ற மறுநாள் விடிவதற்கு முன்பே, தூங்கும் துறவியை வணங்கி, பின் புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு அவளைத் தேடிக் கிளம்புகிறான்.

இலையுதிர்க் காலம்:
துறவி இன்னும் முதுமையடைந்து தனியே வசிக்கிறார். ஏதொ ஒரு பொட்டலத்தை பிரிக்கும் போது அதை சுற்றியுள்ள செய்தி தாளில் 'தன் மனைவியை கொன்று விட்டு தப்பித்த கணவன்' என்ற செய்தியுடன் இளம் துறவியின் புகைபடத்தை காண்கிறார். மறுநாள் நாகரீகமான இளைஞன் தோற்றத்தில் தன்னுடைய சீடன் ஆசிரமத்திற்கு வருகிறான். அவனிடம் துறவி பேசுகிறார்.'அவள் மேல் மிகுந்த அன்பிருந்தது. அவள் இன்னொருவனுடன் செல்ல முயன்றதால் கொன்றேன்'என்று கோபத்தில் கத்துகிறான். அவன் மன அமைதிக்காக, ஒரு புத்த மத சூத்திரத்தை மர பலகையில் எழுதி விட்டு, 'இதன் ஒவ்வொரு எழுத்துக்களையும் கத்தியால் கீறி செதுக்கு. அதன் வழியே உன் ஆத்திரம் குறையும்' என்கிறார் துறவி. சீடன் செதுக்க துவங்குகிறான். அவனை கண்டுபிடித்து கைது செய்ய இரு போலீஸ் அதிகாரிகள் வந்து விடுகின்றனர்.'இப்பணி அவனுக்கு மன அமைதியை கொடுக்கும். அவன் அதை முடித்ததும் கைது செய்யுங்கள்' என துறவி கேட்டு கொள்கிறார். இரவு முழுதும் எழுத்துக்களை செதுக்கி, களைத்து தூங்கி சரிகிறான். காலையில் அவனை கைது செய்து கூட்டிச் செல்கின்றனர். பின், துறவி படகில் விறகுகளை அடுக்கி தீயிட்டு, தன் கண்களிலும், வாயிலும் எழுத்துகள் எழுதப்பட்ட காகிததை இறுக்கமாக ஒட்டி, தீயின் மேல் அமர்ந்து தன் உயிரை மாய்க்கிறார்.

குளிர் காலம்:
பனி மழை பெய்து கொண்டிருக்க, ஏரி பனிப்பாளமாக உறைந்திருக்கிறது. சிறை சென்ற இளைஞன், தனது நடுத்தர வயதில் மன முதிர்வுடன் ஒரு துறவியாக விடுதலையாகி ஆசிரமத்திற்கு வருகிறார். மூத்த துறவி இறந்ததை உணர்ந்து படகை வணங்குகிறார். பின் ஆசிரமத்திலுள்ள ஒரு புத்தகத்தை எடுத்து அதிலுள்ள புத்த மத தியானம் மற்றும் தற்காப்பு முறைகளை தீவிரமாக கற்கிறார். பின்பொரு நாள் கைகுழந்தையுடன் தன் முகத்தை மறைத்தபடி ஆசிரமத்துக்கு ஒரு பெண் வருகிறாள்.புத்தர் சிலை முன் மண்டியிட்டு அழுகிறாள். அன்றிரவு தங்கும் பெண், தன் குழந்தையை அங்கேயே விட்டு வெளியேறும் போது, பனி ஏரியின் ஒரு குழிக்குள் தவறி விழுந்து இறக்கிறாள். துறவி குழந்தையை எடுத்து வளர்க்கிறார். தனது சிறு வயது தவறுகளுக்காக வருந்தி ஒரு பெரிய கல்லை இடுப்பில் கட்டி கொண்டு கையில் புத்தர் சிலையுடன் கடினமான பாதையில் காயங்களுடன் மலையேறுகிறார். மலையில் ஓரிடத்தில் அந்த கல்லை பீடமாக்கி அதன் மேல் புத்தர் சிலையை வைத்து வணங்குகிறார்.

மற்றுமொரு வசந்த காலம்:
நடுத்தர வயது துறவி முதுமையடைகிறார். அக்குழந்தை சிறுவனாகி விளையாடிக் கொண்டிருக்கிறான். ஒரு ஆமையைக் கையிலெடுத்து குச்சியால் குத்தி பார்க்கிறான். துறவியின் சிறு வயது மன நிலை இப்போது அச்சிறுவனிடத்தில். இந்த வாழ்க்கை சுழற்சியைக் காணும் மௌன சாட்சியாக மலை முகட்டில் புத்தர் சிலை மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருக்க படம் நிறைவடைகிறது.ஒவ்வொரு பருவத்திலும் நடக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வைப் பற்றிய ஓர் ஆழ்ந்த பார்வையை முன் வைக்கிறது. படகு, துறவி இறந்ததும் நீரிலிருந்து வரும் பாம்பு, இளைய பருவத்தில் வரும் சேவல்.. என அர்த்தமுள்ள குறியீடுகள் படம் முழுதும் வருகின்றன. ஜென் கவிதைகள் சில வரிகளில் ஆழ்ந்த அர்த்தங்களை உணர்த்தும். அந்த வகையில், இப்படம் ஒன்றரை மணி நேர ஜென் கவிதை! படம் நிறைவடையும் போது சொல்லில் விவரிக்க இயலா ஓர் உணர்வு மனதில் நிரம்பும். இன்னும் பேச்சு எதற்கு? படத்தை ஒரு முறை பார்த்து, உணருங்கள்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! :)

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட