உனது பிரிவின் பயனாய் மூன்று கவிதைகள்
1.
ஒவ்வொரு அலைவரிசையிலும் ஒத்திசைந்து
அடுத்தடுத்த பண்பலை வானொலியிலும் நின்று
எத்தனை மெல்லிசை கேட்டாலும்
தவிர்க்க முடிவதில்லை
உன் தொலைபேசி அழைப்புகளற்ற
இரவின் மீது கவியும் வெறுமையை!!!


-------------------------------------------------
2.
திகைப்பூட்டும் வேலைப்பளு,
ஏமாற்றம்,
சிறு புன்னகை,
கோபம்,
ஆயாசம்
பயணக் களைப்பு
மற்றும் இன்ன பிறவும் சேர்ந்து -
என விதிக்கப்பட்ட
சராசரி அலுவல் நாளிலும்
என் செயல்கள் நிறுத்தி
புலன்கள் நிறைத்து
மனதின் அடியாழம் கீறி
ரத்தச் சிவப்பு நிறத்தில் குரூரமாய்ப் புன்னகைக்கின்றன...
சென்ற இளவேனிற் காலத்தே நிகழ்ந்த நம் பிரிவும்,
அதற்கு முந்தைய உன் நினைவுகளும்!

-----------------------
3.
உன் நினைவுகளின் நதி
எனது கரைகளை உடைக்குமென
அனுமானிக்கவில்லை.

பார்த்து,கேட்டு மற்றும் உய்த்துணரும்
ஒவ்வொரு அன்றாட நிகழ்விலும்
கண்ணிற்குப் புலப்படா ஒரு தூரிகையால்
உனது தனித்த வர்ணத்தை தீட்டிச் செல்கிறாய்.

உன் நினைவுகளின் நிழல் படரா அன்றாடம்
என்பது முற்றிலும் சாத்தியமில்லை போலும்.

வீசும் காற்று,
தடுப்பில் மோதி எதிர்த்திசை திரும்பும் காற்றுடன்
மூர்க்கமாய்க் கலந்து சுழலுகையில்
நடுவே சிக்கித் தவித்துத்
திசையற்றுச் சுற்றியலையும்
துண்டுக் காகிதமாய் என் மனம்... இப்பொழுதில்.

===========================================================================

பின்னுரை:

மூன்று தனித் தனிக் கவிதைகளாக இருந்தாலும், அதை மனதில் நினைக்காமல் படித்த பொழுது மூன்றும் சேர்ந்து ஒரே கவிதையாகவும் எனக்கு தோன்றியது. உங்களுக்கு எப்படி??? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

"இதெல்லாம் சரி... ஏன் ஒரே மாதிரி பிரிவு, தனிமை, நினைவு அப்படினு ஒரே பரோட்டவை இவ்வளோ காலமா திருப்பி திருப்பி போடுற?"ன்னு கேக்குறீங்களா?
அது என்னமோ தெரியலைங்க... சின்ன வயசுல இருந்து "பிரிவு" அப்படிங்கறது நம்மளை ரொம்ப பாதிச்ச விஷயமாவே இருந்துட்டு வருது...
ரெண்டாம் வகுப்பு படிக்குறப்போ நான் வளர்த்த கோழி குஞ்சை காக்கா தூக்கிட்டு போன சம்பவத்துல துவங்கி, போன மாசம் திடீர்னு குடும்பத்தோட வீட்டை காலி பண்ணிட்டு போன பக்கத்து பிளாட் மாமாவோட பொண்ணு வரைக்கும் நம்ம உணர்வுகளோட விளையாடுற மாதிரி ஏதாவது பிரிவு அப்பப்போ நடந்துட்டே இருக்கு.

அதனால நானே கட்டுபடுத்தணும்னு நினைச்சாலும் தானா இந்த டாபிக் பக்கமா மனசு ஒடுது. நம்ம வலைப்பக்கமும் சோக மயமாய் பிரிவும் பிரிவு சார்ந்த பாலைத் திணை மாதிரி காட்சியளிக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வேற மாதிரி எழுதலாமான்னு(அதாவது... கவிதைங்ற பேர்ல வேற ஏதாவது விஷயத்தைப் பத்தி) யோசிச்சிட்டு இருக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கும்னு?

ஒரு நிமிஷம் பாஸு... இன்னும் ஏன் அந்த பக்கத்து வீட்டு மாமா பொண்ணை நினைச்சிட்டு இருக்றீங்க? நானே மறந்துட்டேன்... உங்களுக்கு என்ன பீலிங் வேண்டி இருக்கு? :)
அது சும்மா ஒரு 'Comedy Element'க்காக சேர்த்தது(ஆனா கோழிக்குஞ்சு மேட்டர் உண்மை)... அதுக்கும் இந்த கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.... இது வேற பீலிங் பாஸு.!

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட