அக்னி நட்சத்திரம் முடியும் வேளையில், அனல் பறக்கும் சில மொக்கைகள்

சென்ற வாரம் ஒரு சுப யோக சுப தினத்தில் என் ஆருயிர் தங்கையின் திருமணம் இனிதே நடந்தேறியது.ஒரு பொறுப்பான(?!) உடன்பிறப்பாய் என்னால் முடிந்த வரை கடமைகளை ஆற்றினேன். சாஸ்திரம், சம்பிரதாயம்-னு எத்தனை விஷயங்கள்... பெரும்பாலும் எல்லாமே பொண்ணு வீட்டுக்காரய்ங்களை உசுரை எடுக்குற மாதிரியே இருக்கு... ஷ்ஷ்ஷ்ஷ்... கண்ணை கட்டிருச்சு!!! சில சமயங்கள்ல இந்த மாதிரி சம்பிரதாயம் எல்ல்லாம் இன்னைக்கு சூழல்லயும் நாம பின்பற்றானுமா -ன்னு கேள்விகள் தோணிட்டு இருந்தது...

ம்ம்... அப்புறம் ஒரு மேட்டர்... மூச்சு முட்டுற வேலைகளுக்கு நடுவுல சில சமயம் மண்டபத்தை சுத்தி நோட்டம் விட்டதுல, மாப்பிள்ளை வீட்டு சொந்தக்கார பொண்ணு ஒண்ணு செம அழகா குடும்ப குத்து விளக்கு மாதிரி நின்னுட்டு இருந்ததை பார்துட்டோம்ல... அப்போ எந்த விதமான 'ஆக்கப்பூர்வமான நடவடிக்கை'யும் எடுக்கல (அல்லது) எடுக்க நேரம் இல்ல. அப்புறம் ஒரு நாள் தங்கச்சி கிட்ட அந்த பொண்ணை பத்தி கேட்டு, (ஏன்? எதுக்கு? ன்னு 108 எதிர் கேள்வி வேற ) கொஞ்ச தகவல் கிடைச்சது.


எல்லாம் 'smooth'ஆ இருக்கு. ஆனா நம்ம ராசியை நினைச்சாதான் டெர்ரர் ஆ இருக்கு. எந்த பொண்ணை சைட் அடிச்சாலும் அதிகபட்சம் ஆறு மாசத்துக்குள்ள அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுது... என்னத்தை சொல்ல!!!
ஆகவே பிரியமானவர்களே... பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே அந்த பொண்ணு கொஞ்ச நாள் 'Single' ஆகவே இருக்க வேண்டுமென எனக்காக ஆண்டவரிடம் மன்றாடி பிரார்த்தியுங்கள். நம் கூட்டு பிரார்த்தனைக்கு ஆண்டவர் மனம் இரங்குவாராக.

அட... ஆண்டவர் ஒன்னும் பண்ணலேன்னாலும் அந்த பொண்ணோட அப்பாவாவது மனசு இறங்கட்டும். So...நீங்க பிரார்த்தனை பண்ணுங்க. இது நடந்துட்டா அந்த கேப்-ல போர்க்கால வேகத்தில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள இந்த அரசு( நான்தானுங்க ) உறுதிபூண்டுள்ளது .... ம்ம்ம்... பார்க்கலாம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


இவிய்ங்க ஏன் இப்படி இருக்காய்ங்க?

கடந்த முறை தி. நகர் போனப்போ சரவணா ஸ்டோர்ஸ்ல சிலர் பண்ணுன அட்டூழியத்த பார்த்துட்டு தோணின கேள்வி இது. தி நகர் ல துணி வாங்கலாம்... நகை வாங்கலாம்... சமையலுக்கு வெண்டைக்காய், தக்காளி வாங்கணும்னா கூட அவ்வளவு கூட்டத்தையும் தாண்டி வந்து சரவணா ஸ்டோர்ஸ்ல தான் வாங்கனுமா? பெரும்பாலும் பெண்கள் தான்.

இதை பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. விலை எவ்ளோதான் கம்மியா இருந்தாலும், இது ஒத்து கொள்ள முடியாத விஷயமாக எனக்கு தோன்றியது. அவரவர் தெருவில் ஒரு அண்ணாச்சி கடையோ காய்கறி விக்கிற கிழவியோ இல்லையா? அவர்களை எல்லாம் தவிர்த்து இங்கு வந்து வாங்கி எத்தனை ஆயிரம் மிச்சம் பிடிக்கும் எண்ணமோ? மக்களின் இந்த மனப் போக்கு சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என நினைக்கிறேன்.
இது போன்ற சிறு விஷயங்கள் தொடங்கி பல சீரியசான விஷயங்களில், தமிழ் சமூகம் மிகப்பெரிய ஆட்டு மந்தை கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது...

நீங்க எதுக்கு அய்யா சரவணா ஸ்டோர்ஸ் போனீங்கன்னு கேக்குறீங்களா? எனக்கு பிடிச்ச 'perfume' வேற எங்கேயும் கிடைக்கிறதில்ல... அதனால தான் அங்க போக நேர்ந்தது. மத்தபடி இது போன்று திருவிழா கூட்டத்துக்கு நடுவில் 'purchase' செய்வதென்பது அலர்ஜியான விஷயமாக தோன்றி வருகிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

நிகழ்வுகளின் முடிச்சுகள்
கண் சிமிட்டலுடன் கூடிய
உன் சம்மதப் புன்னகைக்காக
நான் காத்திருக்கும் கணங்களில்...

மழையின் முதல் துளி வேண்டி
மேகம்
பார்த்து முற்றத்தில்
நின்றிருக்கிறாள்
ஒரு சிறுமி.
தனக்கான சொற்கள் தேடி
முற்றுப்பெறா கவிதையொன்று,
பெருவெளியில் அலைகிறது.
ஓடுடைத்து வெளி வர எத்தனிக்கிறது
வெளிர் நீலப் பறவைக் குஞ்சு.

நிகழ்வுகளின் முடிச்சுகள் மேலும் இறுக,
இவற்றின் விதி ரகசியம்
அறிந்த
காலம்
ஒரு நதியாக சலனமற்று
ஓடிக்
கொண்டிருக்கிறது...
உன் நெற்றிச் சுருக்கத்தில் !


பின் குறிப்பு:
இந்த கவிதையையும்(கவிதைன்னு சொல்லலாமா ?!?!), இதுக்கு முன்னாடி சொன்ன விஷயத்தையும் சேர்த்து தாங்கள் செய்யும் கற்பனைகளுக்கும் யூகங்களுக்கும் கம்பெனி நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது :)

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட