அங்காடித் தெரு - விளிம்பு நிலை மனிதர்களின் கதை

என்றாவது தி.நகர் அடுக்கு மாடி ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும் வேட்கையின் நடுவே நெல்லைத் தமிழ் மணக்கப் பேசும் பணியாளர்களையும், அவர்களுக்கென இருக்கும் வாழ்வையும் பற்றி நினைத்ததுண்டா? நினைக்க கற்றுத் தருகிறது அங்காடித் தெரு. நூறு பேரை அடித்து வீழ்த்தி, பஞ்ச் டயலாக் பேசி, வெளிநாடுகளில் பாட்டுக்கு நடனம் ஆடும் தல/தளபதி நடிகர்களுக்கும் இவ்வளவு நாள்(வருடங்கள்) விசிலடித்து கை தட்டிய நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சில குறைகள் இருப்பினும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் வரிசையில் இதுவும் உண்டு என தைரியமாய் சொல்லலாம்.

பெரும்பான்மையாய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து, இத்தகைய அடுக்கு மாடி ஸ்டோர்களுக்கு பணி செய்ய அழைத்து வரப்படும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் சிடுக்குகள் நிரம்பிய வாழ்வை ரத்தமும் சதையுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தந்தையை இழந்து கல்லூரி படிப்பு சாத்தியபடாமல் இங்கு பணி புரிய வரும் கதாநாயகனுக்கும், வீட்டின் பொருளாதார சுமை காரணமாக இங்கு பணி செய்யும் கதாநாயகிக்கும் இடையேயான யதார்த்த வாழ்வை, அவர்கள் தங்குமிடத்தில் துவங்கி, உணவு, பணி சுமை, அவர்கள் நடத்தப்படும் முறை என எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

எடுத்துக் கொண்ட கதையும், அதற்கு வலு சேர்க்கும் ஜெயமோகனின் வசனங்களும் காத்திரமாய் இருக்கிறது. ஒன்றி படம் பார்க்கும் எவரையும் உலுக்கும் காட்சிகள் நான்கைந்து உண்டு. புதுமுக நாயகன் நன்றாய் நடித்திருக்கிறார். பருத்தி வீரன் ப்ரியாமணிக்குப் பிறகு ஒரு அடர்த்தியான கதாநாயகி வேடத்தை தன் அபார நடிப்பால் நிறைவாய் செய்திருக்கிறார் அஞ்சலி. சராசரியான ஒளிப்பதிவும், மோசமான பின்னணி இசையும் தரத்தை வெகுவாய் பாதித்தும், தனது கதையால்/உழைப்பால் சரி செய்திருக்கிறார் இயக்குனர். மசாலா பார்முலாக்களில் இருந்து விலகி ஒரு சாதாரண கதையம்சத்துடன் படம் எடுப்பதே சாத்தியமில்லாத தமிழ் சினிமா சூழலில், புதிய மாற்று திசை நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தை இன்னும் முன்னெடுத்து செல்கிறது அங்காடித் தெரு. இம்மண்ணின் மக்கள் நடமாடும் கனமான கதையை கொண்ட இப்படம் விமர்சனங்களால் ஆராயப்பட வேண்டிய படமல்ல.

தமிழ் சினிமா இதுவரை கட்டமைத்த அதிவீர கதாநாயக பிம்பங்களும், அர்த்தமற்ற க்ளிஷேக்களும் இப்படத்தின் வெற்றியில் உடைந்து நொறுங்கட்டும். வசந்தபாலனுக்கும் அவருடைய உதவி இயக்குனர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

வனம் புகுதலின் துவக்கம்"
கிழக்குச் சீமையிலே" படத்தில் விஜயகுமார் Vs நெப்போலியன் பஞ்சாயத்து காட்சியின்போது, 'தாய் மாமா' எனும் உறவின் பெருமைகளை பக்கம் பக்கமாக ரவுண்ட் ட்ராலி ஷாட்டில் விஜயகுமார் பேசும் வசனங்களை கவனத்துடன் நினைவு கூர்கிறேன். 'ஏன்'னு கேக்குறீங்களா ? சிச்சுவேஷன் அப்படி. மிக மகிழ்ச்சியான சேதி. தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சென்ற வாரம். தாயும் சேயும் நலம்.
பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை என் கைகளில் ஏந்துவது இதுதான் என் வாழ்வின் முதல் முறை.
குழந்தை அவ்வளவு அழகு. என் தலையை விளையாட்டு மைதானமாக்க இது நாள் வரை கொட்ட வைத்த முடியெல்லாம் மருமகளுக்கு கொடுத்து விட்டார் போலும் கடவுள். தலைமுடி மிக அடர்த்தியாய். பகலெல்லாம் தூங்கி, பின் இரவெல்லாம் அழுகிறாள். பகலில் கண்கள் மூடி தூங்கும் போதும் சில நேரங்களில் புன்னகைக்கிறாள். "கடவுள் அவளுக்கு கதை சொல்லிட்டு இருக்காரு... அதனாலதான் சிரிக்கிறா. நீ டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நில்லு" என்கிறாள் என் தங்கை.


%%%%%%%%%%%%%%%%%%


சென்ற மாதம் ஒரு வாரயிறுதியில்,சென்னை ட்ரெக்கிங் கிளப்(CTC) நண்பர்களுடன்(~25 பேர் ), பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் காடு-மலை என சுற்றி திரிந்தேன் . இந்த CTC என்பது, லாப நோக்கில் இயங்கும் அமைப்பு அல்ல. செலவுகளையும் பொறுப்புகளையும் சமமாய் பங்கிட்டு, தன் முனைப்புள்ள, சுற்று சூழல் அக்கறையுள்ள ஆர்வலர்கள் நிரம்பிய, தனக்கு தானே சீரான விதிகள் வரையறுத்து கொண்டு மலையேறும்/ஊர் சுற்றும் குழு. 80% பொட்டி தட்டும் நண்பர்கள். பல ட்ரெக்கிங் ட்ரிப் அனுபவம் பெற்ற சங்கத்து சிங்கம் பாலா என்னையும் சேர்த்து விட்டான்.


இரண்டு நாட்களில் காடு மலை என 25 கிமீ சுற்றியிருப்போம். போகும் வழியில் ஒரு சின்ன அருவி குளியல், யானை துரத்த தெறித்து ஓட்டம், ஒரு கிராமத்தின்(சேத்துமடை) அரசு பள்ளியில் உடனடி அனுமதி வாங்கி அங்கு 'sleeping bag' உதவியுடன் இரவு உறக்கம், சில அரிய வகை விலங்குகள், சராசரிக்கு அதிகமாய் உடலுழைப்பு கோரும் மலையேற்றம், செங்குத்தான மாற்று பாதை வழியாக கண்ணை கட்டிய மலையிறக்கம்(?!) என்று கலந்து கட்டிய பல அனுபவங்கள். நிறைய கற்றுக் கொண்டேன்.
மதங் கொண்ட யானை துரத்திய நிகழ்வு மரண பயம் என்னவென்று உணர்த்தியது. குளித்து முடித்த பின் சிறு சிறு குழுவாய் பிரிந்து மாலை பொழுதில் அடர் வன சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் வந்த இரண்டு டூ வீலர் அன்பர்கள் "யானை துரத்துது... ஒடுங்க" என எங்கள் நால்வர் குழுவை கடுமையாக எச்சரித்தனர். என்னுடன் இருந்த மூவர் அந்த இரு வண்டிகளில் ஏறி கிளம்ப, ஏறி பதுங்க மேடு எதுவும் இல்லாத அந்த சம தள வனத்தில் தெறித்து ஓட ஆரம்பித்தேன். சாலை வளைவுக்கு பின்னிருந்து பிளிறல் சத்தம். என்ன புண்ணியமோ... எச்சரித்து முன் சென்ற TVS50 காரர் மீண்டும் நிறுத்தி என்னையும் ஏற்றி கொள்ள தப்பித்தேன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன். இந்த குழுவில் சேரும் போதே, "எந்த விதமான சேதாரத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல" அப்படின்னு சொல்லி ஒப்புதல் வாங்கிட்டுதான் சேர்ப்பாய்ங்க. நியாயம்தான பாஸ்?


%%%%%%%%%%%%%%%%%%


வி.தா.வருவாயா பாடல்கள் வந்ததுலேர்ந்து ரெக்கார்டு தேயத்தேய கேட்டாச்சு. முதல்ல கொஞ்சம் பிடித்த இப்படத்தின் இசை, ஒரு புள்ளியில் சுற்றி வளைத்து உள்ளிழுத்து கொண்டது. 'ஹோசானா' , 'ஓமனப் பெண்ணே' மற்றும் 'மன்னிப்பாயா' எனக்கு பிடிச்சது. மற்ற பாட்டுகளும் நல்லாயிருக்கு. 'ஆரோமலே'ன்னு ஒரு புது வெரைட்டி பாட்டு. அசத்துகிறார் அற்புத ரகுமான். படம் சீக்கிரம் பார்க்கணும். நான் மிகவும் எதிர்ப்பார்த்த தாமரை ஒரு சில இடங்களில் 'அட' போட வெச்சாலும், எதிர்பார்த்த அளவிற்கோ(அ) 'வாரணம் ஆயிரம்' அளவிற்கோ கலக்கவில்லை.
ஸ்ரேயா கோஷல் பற்றிய என்னோட ட்விட்டர் கமெண்ட்:
உலகின் உயர்தர ஒயின் வகைகளை சுவைக்க வேண்டும் என ஆர்வம் உண்டு. இன்னும் கைகூடவில்லை. வி.தா.வ படத்தின் "மன்னிப்பாயா ..." பாடலில்...ஸ்ரேயா கோஷல் குரலை கேட்ட பின்பு அந்த ஒயின் வகைகள் இப்படித்தான் இருக்குமோவென நினைத்துக் கொள்கிறேன்.


%%%%%%%%%%%%%%%%%%


Strokes of Love

பகல் பொழுதுகளில், மெதுவாய்
கூடுகள் சுமந்தலையும் சிறு நத்தைக் கூட்டத்திற்கு
நிழல் பரப்பி இணையாய் நகர்ந்து
வெப்பம் தணிக்கிறாள் ஒரு சிறுமி.

மழை நாளொன்றில் ஒற்றைக் குடையை
மகனுக்களித்து விட்டு,
சேலைத் தலைப்பால் தலை மூடி நனைந்து கொண்டே
மகனுடன் சாலை கடக்கிறாள் இளம் தாயொருத்தி.

இரை தேடித் திரியும் அணிலைக் கையிலெடுத்து
தன் சட்டை
நுனியில் பால் நனைத்து
துளிகளாய்ப் பிழிந்து ஊட்டுகிறார்
நடைபாதையில் வசிக்கும் முதியவரொருவர்.

துயருறும் பொழுதுகளிலெல்லாம்
விழி மூடி மடி சாய
முடி கோதி முத்தங்கள் தர
வேண்டும் உனைப்போல் காதலியொருத்தி.

இவர்களைப் போன்ற சிலர் தரும்
பேரன்பு எனும் விசையால்
இன்னும் சமன் குலையாமல்,
சுழன்று கொண்டிருக்கிறது ஓர் உலகம்.


பாஸ்... பாஸ். கோபப் படாதீங்க. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்சன். என்னோட அலுவலகத்தில "இது காதல் வாரம்" அப்படின்னு மெயில் விளம்பரம் பண்ணி பல போட்டிகள் நடத்தினாய்ங்க. ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகள் ஐந்தில் கவிதை போட்டி வேற. விட்ருவோமா? பச்சை மஞ்ச கருப்பு பிங்க் தமிழனாகிய நான், தமிழ் பிரிவில் கலந்துகிட்டு கொடுத்த தலைப்புக்கு தாவாங்கட்டைய தடவி யோசிச்சு யோசிச்சு எழுதினதுதான் மேலே. கவிதைங்குற பெயரில் நான் பண்ண இந்த அராஜகத்துக்கு ரெண்டாவது இடம் வேற... எப்பூடி? பரிசு தான் இன்னும் கொடுக்கல. 'Cinthol' சோப்பு வைக்கிறதுக்கு வகையா ஒரு சோப்பு டப்பாவை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். :)

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட