இச்சைப் பெருங்கடல்



பூனைக்குட்டியைப் புரிந்து கொள்ளுதல்
=======================================

யூகிக்க இயலா உடல்மொழியுடன்
தனித்துத் திரியும் பூனைக்குட்டியின் உலகம்
புரியா புதிர்ப் பிம்பங்கள் நிறைந்தது.
மிகு விருப்பப் பொழுதுகளிலோ
உற்ற துணையின் உடனிருப்பிலோ
அவிழ் மொக்கையொத்த சிறு
செவ்வாய் சிரித்து நீர் சுரக்கலாம்.
இவை தவிர எக்கணத்திலும்,
வலி வெறுப்பு களைப்பு என
எவ்வுணர்வுகளின் நிறச் சாயல்களையும்
தன் மேல் படிய விடுவதில்லை.
கரு நிறச் சிறு மென் மயிர்கள் தடவி
சொற்கள் உதிர்க்கா செந்நிற உதடுகளை
வாஞ்சையுடன் நாவால் வருடி
அழுந்த முத்தமிட்டு, அதன் முன்
ஒரு குழந்தையாகிக் குழைந்தால்
உங்கள் நடுவிரல் கவ்விப் பிடித்து
அந்தரங்கப் புதிர்கள் அவிழும்
உணர்வு முடிச்சுகளின் தடம் காட்டிச் சிரிக்கும்.
பூனைக் குட்டியைப் புரிந்து நெருங்கும்
அத்தோழமை கணத்தில் நிகழலாம்
கோடியின்பம் கொண்ட உலகிற்கான
ஒற்றைக் கதவின் திறப்பு.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



இச்சைப் பெருங்கடல்

======================



துணையின்றி நகராத் தோணி செய்து
இச்சைப் பெருங்கடலைக் கடக்கக்
கரையில் காத்திருந்தேன் துடுப்புகளுடன்.
வெகு காலம் சென்ற பின்பு
வசீகர அந்தி மாலையொன்றில்
உயிர் கொல் வளைவுகளுடனும்
மோகமொளிரும் கண்களுடனும்
வந்தவளிடம் சொன்னேன்
நெடிய காத்திருப்பின் வலியை.
என் முகமேந்தி அவள் முத்தமிட்டதும்
நகரத் தொடங்கியது தோணி.
அதி மிருதுவான கழுத்தில்
மென் முத்தங்களிட்டுக் கீழிறங்கி
இளமஞ்சள் நிற இணை முகில்களைக்
கைகளிலேந்தி ஒன்றைக் கவ்வியிழுத்துச்
சுவைக்கும் பொழுது கடலின் நடுவே
சூல் கொண்டதொரு புயல்.
பெரும் அலைகளின் ஓசை லயத்துடன்
ஒத்திசைவாய் முயங்கி
புயலின் நடுவே புணர்ந்து களைத்துறங்கி
மறு கரையில் துயிலெழ
இணைந்தவள் எங்கோ மறைந்ததுணர்ந்தேன்.
அவள் சென்ற திசையில்
பதிந்த காலடித் தடங்களில்
தேங்கியிருக்கின்றன நான் கடப்பதற்கு
இன்னும் நூறு கடல்கள்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



வெண்புறாவின் இறகொன்று
===========================
இறுகத் தழுவி இதழ்கள் கவ்வி
கலவிக் களைத்து காமம் கரைந்தோடிய
மோகப் பொழுதுகள் கழிந்ததும்
முகம் மறைத்த முடி கோதிக்
காது மடலுக்குப் பின் சேர்த்து
நெற்றியிலிடும் ஈர முத்தத்தில்
என் தூயன்பில் தோய்த்த
வெண் புறாவின் இறகொன்று
மிதப்பதாய்ச் சொல்லி மகிழ்கின்றாய்.
நளினமாய் மிதந்திறங்கும்
அன்புச் சிறகைக் கவ்விப் பிடித்து
மோகத்துடன் மீண்டும் உன் மேல்
பாய்ந்து முயங்கக் காத்திருக்கிறது
தீ நாவுகளைப் போலசையும்
பிடரி மயிர் கொண்ட என்றும் அயரா
காமம் எனும் நீலக்கண் புரவி.



.

4 comments:

ஷர்மி செவ்வாய், நவம்பர் 09, 2010 10:21:00 பிற்பகல்  

வாசிப்பதற்க சுகமாய் இருக்கிறது
பூனைக்குட்டி கவிதை அருமை
- ஷர்மி

Kannan K புதன், நவம்பர் 10, 2010 12:16:00 பிற்பகல்  

Nalla irukku machi

ஸ்ரீவி சிவா திங்கள், நவம்பர் 15, 2010 2:06:00 பிற்பகல்  

நன்றி ஷர்மி...

நன்றி கண்ணா...

உத்தண்டராமன் ஞாயிறு, ஜனவரி 23, 2011 11:02:00 முற்பகல்  

பதிந்த காலடித் தடங்களில்
தேங்கியிருக்கின்றன நான் கடப்பதற்கு
இன்னும் நூறு கடல்கள்.

Miga Arputham Siva.. Lovely . Un Padaipugal Puthagama velivara vaendum .. in nanbanin ava ...

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட